சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் ஒன்றியம் பொய்யலூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் சரவணன்(60). திமுகவை சேர்ந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு அமைச்சர் குறித்து பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், "அமைச்சரை சந்தித்து, தனது மகனுக்கு கல்லூரியில் சீட் வாங்குவது தொடர்பாகப் பரிந்துரை கடிதம் குறித்து பேசினேன். அப்போது என்னிடம் அமைச்சர் தரக்குறைவாக நடந்து கொண்டார். அடிமட்ட தொண்டர்களும் கழகமும் இதை கவனிக்க வேண்டும்.
40 ஆண்டுகளாக திமுகவில் இருக்கிறேன். நான் வேறு கட்சிக்கு சென்றதில்லை. அமைச்சர் சாதி அரசியல் செய்கிறார். பல கோடி ஊழல் செய்து விட்டு தொண்டர்களை புறக்கணிக்கிறார். இதை ஸ்டாலின் கவனத்தில் கொள்ளாவிட்டால், சிவகங்கை மாவட்டத்தில் திமுக அழிந்துவிடும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பொய்யலூர் சரவணன் இன்று வெள்ளிக்கிழமை இரவு கை முகத்தில் ரத்தக்காயங்களுடன் காரைக்குடி டிஎஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் தூண்டுதலின் பேரில் ஆட்டோவில் வந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "கடந்த 2011ஆம் ஆண்டு உயிர் சோதம் ஏற்படும் அளவிற்கு அமைச்சரின் அடியாட்கள் என்னைத் தாக்கினார். இருப்பினும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் கட்சி பணியைத் தொடர்ந்தேன். ஆனால், அப்போதிலிருந்தே அமைச்சர் என்மீது பகையாக இருந்தார்.
இருப்பினும், என்னுடைய மகனுக்கு கல்லூரியில் சீட் வாங்குவது தொடர்பாக அவரிடம் மனு கொடுக்க சென்றேன். அப்போது அமைச்சர் என்னைத் தகாத வார்த்தையில் திட்டினார். இது தொடர்பாக, கடந்த 28 ஆம் தேதி வீடியோ வெளியிட்டேன்.
இதைப் பார்த்த அமைச்சரின் ஆதரவாளர்களான புலிக்குத்தியைச் சேர்ந்த ராம சீனிவாசன், நெடுச்செழியன், தெற்கு தெருவைச் சேர்ந்த கட்டை கார்த்தி ஆகியோர் சேர்ந்து, தேனத்துப் பாலம் அருகே வைத்து என்னைத் தாக்கினார்கள். மேலும் என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள்.
இதற்கு முழு காரணமும் அமைச்சர்தான் அவர் மீது அவருடைய ஆதரவாளர்கள் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து பேசிய, ''டிஎஸ்பி பிரகாஷ் விசாரித்து வருகிறோம்'' என்று கூறினார்.
இதையும் படிங்க: என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் ரத்து.. காரணம் இது தானா?