சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக விஜயதாரணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் விஜயதாரணி தன்னுடைய சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனையடுத்து கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் விஜயதாரணி மீது நடவடிக்கை எடுக்கச் சபாநாயகருக்குக் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியிருந்தது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாகவே தனது ராஜினாமா கடிதத்தைச் சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பினார் விஜயதாரணி. இதனையடுத்து, விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் வேட்பாளர் தாரை கத்பர்ட் திமுக கூட்டணி சார்பில் களம் கண்டார். அதிமுக சார்பில் ராணி, பாஜக சார்பில் நந்தினி, ஆகியோர் போட்டியிட்டனர். இதனால் இந்த தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 91,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் நந்தினி 50,880 வாக்குகள் பெற்றார்.
அதிகரித்த வாக்கு சதவீதம்: விஜயதரணி பாஜகவுக்கு சென்ற நிலையில் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் செல்வாக்கு சரியும் வாய்ப்பிருப்பதாக எதிர்க் கட்சியினர் கூறி வந்த நிலையில், கடந்த தேர்தலை ஒப்பிடும் போது இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் வாக்குகள் கிடைத்து இருக்கின்றது.
கடந்த 2021 தேர்தலில் விஜயதரணி 87,473 வாக்குகள் பெற்றிருந்தார், தற்போது இந்த தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் தாரகை கத்பர்ட் 91,054 வாக்குகள் பெற்றார். இதனை ஒப்பிடும் போது தாரகை கத்பர்ட்டுக்கு 3,581 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஏல்ஏ-வாக பதவியேற்பு: இந்நிலையில் விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழகச் சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, தாரகை கத்பர்ட்க்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதனையடுத்து புதிதா பதவி ஏற்றுக்கொண்ட தாரகை கத்பர்ட் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதையும் படிங்க: ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!