திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டார்.
மேலும் இக்கூட்டத்தில் 36 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் அதிமுக, திமுக எந்த ஆட்சி நடைபெற்றாலும் கள்ளச்சாராயம் மரணங்கள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற மரணங்கள் நடைபெறுகிறது என்றால் காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர், தலைவர், துணைத் தலைவர், எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் உள்ளிட்டோர் அனைவருமே அரசுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
தமிழக முதலமைச்சர் சட்டத் திருத்தம் கொண்டு வந்து கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும். மேலும், வருவாய்த் துறை, மாவட்ட ஆட்சியர் கீழ் இயங்கக்கூடிய ஏனைய துறைகளும் இதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும். சமூக நீதியின் பிறப்பிடம் தமிழகம் என்று திராவிட இயக்கங்கள் சொல்லி வருகிறார்கள்.
ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் சமூக நீதி கிடைக்காத ஒரு சூழல் இருக்கிறது. அதற்குக் காரணம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆதலால் உண்மையான சமூக நீதி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த சாதியில் உள்ள எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கல்வி, வேலை வாய்ப்பு, வழங்கப்பட்டால் தான் உண்மையான சமூகநீதி ஆகும்.
மேலும் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக கோரிக்கை முன் வைக்கிறது.
அதேபோன்று போக்குவரத்துத் துறையில் ஒப்பந்தம் அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகள் நிரப்பப்படுவதால் அதில் சமூக நீதி பின்பற்றப்படாது. முறையாக நிரந்தர வேலைக்கு சமூகநீதி அடிப்படையிலேயே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள சீனியாரிட்டி அடிப்படையில் பணியினை நிரப்பப்பட வேண்டும்.
மேலும், பரந்தூர் மக்கள் ஆந்திர மாநிலத்திற்கு இடம்பெயரவுள்ளதால் மத்திய அரசு பரந்தூர் மக்களின் கோரிக்கை ஏற்று விமானநிலையம் கட்டுவதைக் கைவிட வேண்டும். தமிழகத்தில் மணல் கொள்ளை அளவுக்கு அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
கள்ளச்சாராய சாவை நான் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என தமிழக முதலமைச்சர் அறிவித்தாரோ அதேபோன்று மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாது மணல்கள் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழக அரசே மணல் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு; "ஆயிரக்கணக்கான டாக்டர்கள் நம்பிக்கை இழப்பு" - மு.க.ஸ்டாலின் கண்டனம்! - MK Stalin on NEET PG Postponed