சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாநில மகளிர் வரைவு கொள்கை தமிழக அரசால் வெளியிடப்பட்டு, அதன் பிறகு கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று (ஜன.24) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கருத்துக் கேட்பில் பல்வேறு திருத்தங்கள் இருந்ததால் அவைகளில் மாற்றம் செய்யப்பட்டு, அவைகளை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு முழு ஆவணமாக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
மாநில மகளிர் கொள்கையில் உள்ள சிறப்புகள்: மாநில மகளிர் கொள்கையில், மகளிருக்கு பல்வேறு திட்டங்களை வகுக்கும் வகையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- அரசு மற்றும் தனியார் என அனைத்து இடங்களிலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்துவது.
- கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தைக் கூடுதலாக 50 நாட்கள் நீடிப்பது.
- 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்குக் கல்வியில் முக்கியத்துவம் அளிப்பது, கல்வி இடைநிற்றல் காரணமாகப் படிப்பை நிறுத்தியவர்களை மீண்டும் கல்வியைத் தொடர வழிவகை செய்வது.
- அரசு தனியார் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் பெண்களுக்குச் சம உரிமை வழங்குவது.
- அரசியல் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு ஆறு மாத கால சிறப்புப் பயிற்சி அளிப்பது.
- பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி இருப்பது தான் மாநில மகளிர் கொள்கை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பெண்களுக்குப் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் 33.3 சதவீதம் பிரதிநிதித்துவம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33.3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குதல் போன்றவையும் இதில் அடங்கும்.
அரசியல் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு ஆறு மாத கால படிப்பில் வழங்கப்படும் பயிற்சிகள்: அரசியல் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு வழங்கப்படும் 6 மாத சிறப்புச் சான்றிதழ் படிப்பில், பதவியின் பணி என்ன?, அதன் முக்கியத்துவம். பதவியில் இருக்கும் போது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? பதவிக்கான எதிர்பார்ப்புகள் என்ன? என்பதெல்லாம் கற்றுக்கொடுக்கப்படும். மேலும் அலுவலகத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான பயிற்சி, மற்றவரின் துணை இல்லாமல் பெண்கள் தாங்களாகச் செயல்படுவதற்கான பயிற்சி மற்றும் அரசியலில் போட்டியிடத் தேவையான பக்குவம் போன்றவையும் கற்றுக்கொடுக்கப்படும். இந்த பயிற்சி பெண்களுக்கு அலுவலக விவகாரங்களை தாங்களாகவே கையாள உதவும்.
இந்த முன்னெடுப்பு உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர் முதல், மேயர் வரையிலான பதவிகளுக்கு தேர்வாகும் பெண்கள், தங்களின் உறவினர்களின் கைகளில் பொம்மைகளாக மாறுவதை தடுக்கும். வெளிப்படையாகவே சில உள்ளாட்சி பதவிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர் உள்ளாட்சிப் பணிகளை பார்க்கலாம். பெண்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வழங்குவதன் மூலம் அவர்கள் தன்னிச்சையாக இயங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த சான்றிதழ் பயிற்சி வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மாநில மகளிர் கொள்கையில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு தான் இது அமைச்சரவையில் ஒப்புதலும் அளிக்கப்பட்டு உள்ளது. மாநில மகளிர் கொள்கை தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஈடிவி பாரத்திற்கு அளித்த தகவலில், “கணவனை இழந்த பெண்கள், தனியாக வசிக்கக்கூடிய பெண்கள், சுய தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், உற்பத்தியில் ஈடுபடும் பெண்களுக்குக் கவனம் செலுத்தி அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது.
மேலும், அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வது, மாற்றுத் திறனாளி பெண்கள், ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்டவை அடங்கியுள்ளது. நிர்வாகத்தை எப்படிக் கையாள்வது, நிறுவனங்களில் பெண்களுக்குச் சம உரிமை வழங்குவது, சுய தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்குப் பயிற்சியளிப்பது உள்ளிட்டவற்றை உள்ளடக்கியுள்ளது.
இந்த மாநில மகளிர் கொள்கையில் 100 நாள் வேலைத் திட்டத்தைப் பொருத்தவரை நாட்கள் மற்றும் நேர நீடிப்பு என்பது மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இதில் மாநில அரசுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. மேலும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் சமூகத்தில் பெண்கள் யாருக்கும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை முதலில் அவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான், பல்வேறு பயிற்சிகள் அவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல் 2024: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் சுற்றுப்பயண விவரம் வெளியீடு!