ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரணி லோக்சபா தொகுதியானது, 2008 இல் தொகுதி மறுசீரமைப்பின்போது வந்தவாசி தொகுதியிலிருந்து உருவாக்கப்பட்டது.
அரிசி மற்றும் பட்டு உற்பத்திக்கு பெயர்போன பகுதியாக ஆரணி திகழ்கிறது.நெற்பயிரை தவிர்த்து கரும்பு, வாழை போன்ற நன்செய் பயிர்களும், வேர்க்கடலை, சோளம், கம்பு போன்ற புன்செய் பயிர்களும் இப்பகுதியில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. மொத்த மக்கள்தொகையில் சுமார் 56 சதவீதம் பேர் விவசாயத்தைச் சார்ந்துள்ளனர்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆரணி தொகுதியை பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்குதான் ஒதுக்கி வருகின்றன. திமுக, அதிமுகவை தவிர பாமகவுக்கும் இங்கு ஓரளவு வாக்கு வங்கி உள்ள து
சட்டமன்றத் தொகுதிகள்: ஆரணி மக்களவைத் தொகுதியானது போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது. ஆரணி தொகுதி இதுவரை 3 லோக்சபா தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் 2 முறை காங்கிரஸ் கட்சியும், ஒருமுறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
2019 - காங்கிரஸுக்கு கைகொடுத்த தொகுதி: ஆரணி லோக்சபா தேர்தலில், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 14,45,781 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 7,14,410, பெண் வாக்காளர்கள் 7,31,293 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 78 பேர் அடங்குவர்.
இவர்களில் மொத்தம் 11,43,907 வாக்குகள் பதிவாகின. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 82.5. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.கே. விஷ்ணுபிரசாத் 6,17,760 வாக்குகள் பெற்றதுடன், 2,30,806 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏழுமலை 3,86,954 வாக்குகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர் செந்தமிழன் 46,383 வாக்குகளும், நாதக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தமிழரசி 32,409 வாக்குகளும் பெற்றனர்.
கணிசமாக குறைந்த வாக்குப்பதிவு: அண்மையில் நடைபெற்று முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில், ஆரணி தொகுதியில் மொத்தம் 14,96,118 வாக்காளர்கள் இருக்கும் நிலையில் (ஆண் வாக்காளர்கள் 7,34,341, பெண் வாக்காளர்கள் 7,61,673, மூன்றாம் பாலினத்தவர் 104) மொத்தம் 11,33,520 வாக்குகள் பதிவாகின.மொத்த வாக்குப்பதிவு 75.76 சதவீதமாகும்.
களமாடிய வேட்பாளர்கள்: திமுக சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் தரணி வேந்தன், அதிமுக சார்பில் கஜேந்திரன், பாமக சார்பில் கணேஷ்குமார், நாதக சார்பில் பாக்யலட்சுமி உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர்.
கூட்டணி பலம்: இத்தொகுதியில் கடந்தமுறை திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் இங்கு போட்டியிட்டது. ஆனால் இந்தமுறை ஆரணி தொகுதியில் திமுக நேரடியாக களம் கண்டுள்ளது. திமுக வேட்பாளருக்கு அமைச்சர் எ.வ.வேலு பக்கபலமாக இருந்து தொகுதியில் வாக்கு வேட்டை நடத்தினார். இத்தொகுதியை பொறுத்தவரை, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலத்தில் திமுக களமிறங்கி உள்ளது.
தொகுதியில் அணிவகுத்த முன்னாள் அமைச்சர்கள்: ஆரணி தெற்கு அதிமுக ஒன்றியச் செயலாளராக உள்ள அக்கட்சியின் வேட்பாளர் கஜேந்திரன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வதில் சிறப்பாக பணியாற்றி நற்பெயரை சம்பாதித்துள்ளதாக தொகுதியில் பரவலாக பேச்சு உள்ளது. இவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முக்கூர் என்.சுப்பிரமணியன், அதிமுக மாவட்டச் செயலர்கள் ஜெயசுதா, தூசி கே.மோகன் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
விவசாயிகள் ஆதரவு யாருக்கு?: பாமக வேட்பாளர் கணேஷ்குமாருக்கு ஆதரவாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். மேல்மா சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக பாமக குரல் கொடுத்துள்ளதால், விவசாயிகள் வாக்கு கணிசமாக தங்களுக்கு கிடைக்கும் என்று பாமக எதிர்பார்க்கிறது.
சென்டிமென்ட் பிரச்சாரம்: நாதக வேட்பாளர் பாக்கியலட்சுமி மக்களை நம்பி போட்டியிடுகிறேன் என்று சென்டிமென்ட்டாக பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?: தற்போதைய சிட்டிங் எம்.பி.யான விஷ்ணுபிரசாத் மீது, தொகுதி பக்கமே அவ்வளவாக வரவில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பதாக தெரிகிறது.பாய் உற்பத்தி அதிகமாக நடைபெறுவதால், வந்தவாசியில் கோரப்பாய் பூங்கா அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றவில்லை என்ற குறையும் இத்தொழில் புரிபவர்களின் மத்தியில் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் திமுக நேரடியாக களம் கண்டுள்ள ஆரணி, இந்தியா கூட்டணிக்கு கைகொடுக்குமா? அதிமுக பக்கம் வெற்றி காற்று வீசுமா? என்ற கேள்விக்கான விடை ஜுன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: தேர்தல் 2024: திமுக Vs அதிமுக; இருமுனைப் போட்டியில் ஈரோடு தொகுதியை கைப்பற்ற போவது யார்? - LOK SABHA ELECTION 2024