சென்னை: தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன், இன்று சென்னை திரும்பினார். இதனையடுத்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “அரசியல் சாயம் இல்லாமல் விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தப்பட்டு உள்ளது. தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் பிரதமர் வழங்குவார் என்பதற்கு விஜயகாந்த்திற்கு வழங்கிய விருது ஒரு சான்று. விஜயகாந்த் காலத்திலிருந்த திரையுலகம் இன்று உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தமிழகத்தில் குறைந்து வரும் ஆன்மீக அணுகுமுறையை மீட்டெடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். 3 ஆண்டுகள் முடிந்து 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக ஆட்சி, 'சொல்லாட்சி அல்ல செயலாட்சி' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
ஆனால், செயல் இல்லாத ஆட்சியாக நடத்தி வருகிறார் ஸ்டாலின். காரணம், நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கொலை செய்து 8 நாட்களாகியும் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
ஆனால், சவுக்கு சங்கர் கைது செய்தது எப்படி? பெண்களைப் பற்றி யார் பேசினாலும் தவறு. ஆனால், சவுக்கு சங்கரை சட்ட ரீதியாக அணுகாமல் வன்முறையாக அணுகி உள்ளனர். கஞ்சா வைத்திருந்ததாகக் கைது செய்யும் போது கஞ்சா கடத்தல்காரரை வைத்து இருந்த உங்களை என்ன செய்வது?
காங்கிரஸ் மாவட்ட தலைவர் இறப்பில் 8 நாட்களாகியும் குற்றவாளியைக் கைது செய்யவில்லை. ஆனால், யூடியூப்பில் ஏதாவது போட்டால் கைது செய்து விடுகிறீர்கள். நீங்கள் தான் பத்திரிகை சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறீர்கள். பெண்களுக்கு மரியாதை தராதவர்களைக் கண்டிப்போம்.
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணத்தை மறைப்பதாகத் தோன்றுகிறது. உயர் விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையும் எழுகிறது. 2026 தேர்தலை திமுக நேரடியாகச் சந்திக்கவே முடியாது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கரோனா காலத்தில் தடுப்பூசி உள்பட சாதனைகள் கொண்ட பட்டியலைத் தருகிறேன். மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் என்ன செய்தீர்கள் என்ற பட்டியலை வெளியிடுங்கள். எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். கொள்கை மாற்றம் இருந்தாலும், அரசியல் நாகரீகம் கடைபிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர்ந்த தயாநிதி மாறன்.. காரணம் என்ன? - LOK SABHA ELECTION 2024