தூத்துக்குடி: தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் அறங்காவலர் அறை திறப்பு விழா இன்று (மார்ச் 12) நடைபெற்றது. இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு அறங்காவலர் அறையைத் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "மகளிர் உரிமை திட்டம் குறித்து நடிகை குஷ்பு இழிவு படுத்திப் பேசி உள்ளது. தமிழ்நாட்டுப் பெண்களுடைய வாழ்வாதாரம் குறித்து அறியாமல் இருக்கிறார் என்று இதன் மூலம் தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சுதந்திரம் கொடுங்கள் என கூறுகிறார்கள், 1989ஆம் ஆண்டு பெண்களுக்குச் சொத்துரிமை, வேலைவாய்ப்பு, கல்வி என அனைத்தையும் கொடுத்தது திமுக தான். அதேபோல், இதற்கு இந்தியாவில் அடித்தளம் இட்டதும் திமுக தான். அதனால், இதற்கு 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பதிலளிப்பார்கள்.
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் எல்லா தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அதை வைத்து, திமுகவிற்கு அவப்பெயரை உருவாக்கிவிடலாம் என நினைக்கின்றனர். அதிமுக மீது குட்கா ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. 10 ஆண்டுகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். வேண்டும் என்றே திமுக மீது குற்றம் சாட்டுகிறார்கள்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவை தொகுதியில் களமிறங்கும் அண்ணாமலை.. பாஜகவின் பக்கா பிளான்!