சென்னை: தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்து கழகங்கள் (STUs), எட்டு கோட்டங்களின் 26 மண்டலங்கள் மூலம் 317 பணிமனைகளில் இருந்து 10,129 வழித்தடங்களில் 20,232 பேருந்துகளை இயக்கி வருகிறது. இவ்வாறு இயங்கும் பேருந்துகள் தினமும் 82 லட்சம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து, சுமார் 1.75 கோடி பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
தமிழக போக்குவரத்து சேவை: இதில் ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான மக்கள் தொகையுள்ள கிராமங்களுக்கு குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவையை வழங்கிவருகிறது. இந்த குறைந்த கட்டணமானது, 2018 ஜனவரியில் அமல் படுத்தபட்ட கட்டண திருத்தமாகும். இந்நிலையில் போக்குவரத்து வாகனங்களுக்கு பயன்படும் எரிபொருள் விலைகள் உயர்ந்தும், உதிரிபாகங்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் அதிகரித்தும், ஆண்டு தோறும் ரூ. 6,600 கோடி நிதி வருவாய் குறைவாக இருப்பினும், அரசின் மாபெரும் உதவியால் இந்த சேவைகள் இயல்பாக நடைபெற்று வருகின்றன.
அரசும் போக்குவரத்து திட்டங்களும்: பொதுப்போக்குவரத்திற்கான அரசின் உறுதிபாட்டினால், மகளிருக்கான விடியல் பயணம் திட்டம், மாணவர்களுக்கு பேருந்து பயணச் சலுகை, பல்வேறு பயணப் பிரிவுகளுக்கான கட்டணச் சலுகைகள் போன்ற நலத்திட்டங்கள் மூலமும் , டீசல் கூடுதல் கட்டணத்திற்கான மானியம், செயல்திறன் மானியம் போன்ற உதவிகளும் அரசினால் வழங்கப்படுகின்றன.
பாரம்பரிய கட்டண வருவாயைத் தவிர, அரசுப் போக்குவரத்து கழகங்கள் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த பல்வேறு இதர வருவாய் திட்டங்களை மேற்கொள்கின்றன. இதற்காக டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை மையங்களை நிறுவுதல், பேருந்துகளில் விளம்பரம் மேற்கொள்ளல், கட்டிடங்களை வாடகைக்கு விடுதல், சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்துதல், சில செயல்பாடுகளை வெளியாட்கள் மூலம் மேற்கொள்ள ஒப்படைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இனி பெருங்களத்தூரில் டிராபிக் கிடையாது.. மேம்பாலம் பணிகளின் தற்போதைய நிலை என்ன? -
புதிய திட்டம்: இந்நிலையில் தற்போது அரசுப் பேருந்துகளில் பொருள்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பேருந்தின் இடங்களை பயன்படுத்தி சரக்கு இடமாற்றத்துடன் கூடிய போக்குவரத்து தொழிலுக்குள் நுழைவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் பொருள்களை சேமித்து வைத்து இந்த சேவையை வழங்க உள்ளது.
மேலும் பொது - தனியார் கூட்டுத் திட்ட (PPP) முறைமையில் அமல்படுத்தப்படும். இது அரசுக்கும் தனியார் நிறுவனத்துக்கும் வருவாய் பகிர்வு அல்லது பிற வணிக ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்பட உள்ளது. இந்த முயற்சியின் திறனையும் சாத்தியமையும் மதிப்பீடு செய்ய ஆலோசகரை நியமிக்கப்பட உள்ளனர்.
இதையடுத்து ஆர்வமுள்ள நிறுவனங்கள் பங்கேற்பதற்கான கோரிக்கை (RFP) தயாரித்து, உரிய சரக்குகளை போக்குவரத்து கூட்டாளரைத் தேர்வு செய்வதற்கான செயல்முறைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.பின் இதில் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் இந்த பொருள் போக்குவரத்துத் தொழிலைச் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.
இந்தத் திட்டத்தை மேற்கொள்ள, அரசு பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு நிறுவனத்தை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் புதிய வருவாய் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நீண்ட காலப் பொதுப் போக்குவரத்து சேவைகளை ஏற்படுத்த உள்ளது.