சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 10) முதல் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தலின் படி, பள்ளிகள் திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அதாவது, 70 லட்சத்து 67 ஆயிரத்து 94 மாணவர்களுக்கு பாடப்புத்தகமும், 60 லட்சத்து 75 ஆயிரத்து 315 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகமும், 8 லட்சத்து 22 ஆயிரத்து 603 மாணவர்களுக்கு புவியியல் வரைப்படம் வழங்கப்படுகிறது.
மேலும், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகை சரியாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ஆதார் முகாம் அமைக்கப்பட்டு மாணவர்களின் ஆதார் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகளும், அஞ்சலகம் மூலம் வங்கிக் கணக்கு துவங்கும் பணிகள் இன்று தொடங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2023-24ஆம் கல்வியாண்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஏப்ரல் 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோடை விடுமுறையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பள்ளி மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களை சரிபார்த்தல் போன்ற பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், 2024-2025ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகள் ஆகியவை மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், புத்தகப்பை, காலணிகள், ஷூ மற்றும் சாக்ஸ், கம்பளிச்சட்டை, மழை கோட், பூட்ஸ் மற்றும் சாக்ஸ், சீருடைகள், வண்ணப் பென்சில்கள், வண்ணக் கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் ஆகிய நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
மேலும், இந்த நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்பட்ட விவரங்கள் EMIS தளத்தில் உள்ளீடு செய்தவுடன் மாணவர்களின் பெற்றோரது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி உடனடியாக அனுப்பப்படும். எனவே, இப்பொருள்களின் இருப்பு குறித்து ஆசிரியர்கள் கவனமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான ஆதார் புதுப்பிப்பு மையம் பள்ளிகளிலேயே துவக்கி வைக்கப்பட உள்ளது. மாணவர்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு பள்ளி ஹைடெக் ஆய்வகங்களுக்கு 8,209 மேற்பார்வை பணியாளர்களை தற்காலிகமாக நியமிக்க திட்டம்!