கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள தனியார் பல் மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பங்கேற்றார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "தமிழ்நாடு அரசின் மீது எந்த குற்றச்சாட்டும் கூற முடியாத நிலையில், ஆங்காங்கே சில தனிப்பட்ட விரோதங்களால் நடைபெறும் கொலை குற்றங்களை அரசுக்கு எதிராக சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று கூறுகிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். அதனால் தான் வெளிநாடுகளில் இருந்து வரும் அந்நிய மூலதனம் மிக அதிக அளவில் தமிழ்நாட்டிற்கு வருகிறது. மணிப்பூரில் நடப்பது போன்ற கலவரங்கள் எல்லாம் இங்கு நடப்பதில்லை.
தமிழகத்தில் சமூக நீதி ஆட்சி, திராவிட ஆட்சியை முதலமைச்சர் நடத்துவதால் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதனால் தான் உலக செஸ் போட்டி இந்தியாவில் நடத்த ஆலோசனை செய்யப்படும் போது தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது. இதிலிருந்தே தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.
இந்தியாவிலேயே அனைத்து சமுதாய மக்களுக்கு, அவர்களது வழிபாடுகளை செய்வதற்கு, பாதுகாப்பு அளிப்பதற்கு பாதுகாப்பு அளித்துள்ளது தமிழக அரசு தான். தமிழகத்தின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இந்த ஆட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகம் உள்ளது. இது பிடிக்காத சிலர் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக இல்லை என பரப்பி வருகின்றனர்" எனக் கூறினார்.
தொடர்ந்து கள்ளச்சாராய மரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்தது அதிகம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "நீதிமன்றத்தைக் கேட்டு முதலமைச்சர் முடிவு எடுக்க முடியாது. குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முதலமைச்சர் கொடுப்பார், இதில் யாரும் கேள்வி கேட்க முடியாது" எனக் கூறினார்.
மேலும், அதிமுகவினர் வெளிநடப்பு குறித்து கேட்டபோது, "அவர்கள் சட்டசபையில் பேசுவது சிக்கல் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பிரச்சினையோ தெரியவில்லை, நாங்கள் அவர்களும் உள்ளே இருந்து அவர்களது கருத்தைக் கூற வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். வரும் காலங்களில் அவர்கள் அதிக நேரம் சட்டசபையில் பேச வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: “ஏர் இந்தியாவை விற்றது போல் பிஎஸ்என்எல்-ஐயும் விற்றுவிடுவார்கள்” - ஆ.ராசா பேச்சு!