சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில், 39 கோடி ரூபாயில், நினைவிட கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளை கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொதுப்பணித்துறை துவக்கியது. தற்போது, கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளன.
அதே சமயம் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தையும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8 புள்ளி 57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.26) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். முன்னதாக இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி சிலைகளையும் திறந்து வைத்து மலர் துாவி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி, அமைச்சர்கள், சேகர்பாபு, எ.வ.வேலு, வைகோ, கவிஞர் வைரமுத்து, சென்னை மேயர் பிரியா, தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா, மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மட்டுமே கலந்து கொண்டனர். பொது மக்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ள நிலையில், முக்கிய பிரமூகர்கள் மட்டும் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும், கருணாநிதி நினைவிடத்தின் கீழ் நிலவறைப் பகுதியில் கலைஞர் உலகம் என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. அருங்காட்சியகத்தின் வலப்புறத்தில் திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்று வாரியம் உள்ளிட்டவற்றின் புகைப்படங்களும், இடது புற சுவரில் தமிழ்த்தாய் வாழ்த்தும், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என 1970ல் கருணாநிதி அரசு பிறப்பித்த அரசாணையும் வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் உரிமை போராளி கலைஞர் உள்ளிட்ட அறைகள் அருங்காட்சியகத்தில் தொடங்கப்பட்டு பல புகைப்படங்கள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. புத்தம் புது பொழிவுடன் காணப்படும் கலைஞர் நினைவிடத்தில் விரைவில் பொது மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : சென்னை மெரினாவில் இன்று மாலை திறக்கப்படும் 'கலைஞர் நினைவிடம்' - சிறப்பம்சங்கள் என்ன?