சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், கொளத்தூர் ஜெகநாதன் தெருவில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் பகிர்ந்த பணியிட மையம் எனப்படும் Co-working Space மற்றும் மாணவர்களுக்கான கல்வி மையம் என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்தார்.
இதன் பின்னர், அனிதா அகாடமி மூலம் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கலைஞர் இலவச கண் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது விழா மேடையில் பேசிய அவர், "கடந்த 2017ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக அனிதா தற்கொலை செய்து உயிரிழந்தபோது நாம் அனைவரும் வேதனைக்கு உள்ளானோம். ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவ கனவை பறிக்கின்ற நீட் எதிரான சட்டப்போராட்டம் தொடர்ந்து வருகிறது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு ஒரு நாள் மத்திய அரசு பணியத்தான் போகிறது.
அனிதா அச்சீவர்ஸ் அகடாமி மூலமாக ஏராளமான மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். முதல்வர் படைப்பகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நான் முதல்வர், புதுமை பெண், தமிழ் புதல்வன் போன்ற ஒவ்வொரு திட்டங்களையும் தமிழக அரசு செய்து வருகிறது.
இதையும் படிங்க: மத்திய அரசை எதிர்க்கும் தீர்மானம்...தவெக செயற்குழு கூட்டத்தில் விஜய் அதிரடி!
தமிழ்நாடு இளைஞர்களை எல்லாவகையிலும் தகுதி அடைந்தவர்களாக மாற்றுவது தமிழக அரசின் லட்சியம். ஆனால் இந்த அரசு எதுவுமே செய்யவில்லை என்று அரசை குறை கூறி வருகிறார்கள். திமுக வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை.
அதனால் தான், புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் தி.மு.க அழிய வேண்டும் என பேசி வருகிறார்கள். ஆனால், அதைப்பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் போக்கு மக்களுக்கு நன்மை செய்யக்கூடியது மட்டுமே.
வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா கூறுவார். ஆகவே, தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, மக்களுக்கு பணியாற்றவே எங்களுக்கு நேரம் இல்லை. எனவே மக்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம்" என்று கூறி மறைமுகமாக விஜயை முதலமைச்சர் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்