தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் தமிழ் கடவள் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம்படை வீடாகும். இத்தலத்திற்கு தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை தருகிறார்கள்.
பொதுவாக இந்த கோயிலுக்கு வேண்டுதலுக்காக வரும் நபர்கள் கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் படுத்துறங்குவது வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இங்கு கோயிலில் அதற்கு அனுமதி இல்லாததால் கோயில் தெற்கு புற வாசல் பிரதான கதவிற்கு முன்புறம் படுத்துறங்கி காலையில் காவிரியில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு; காலை, மாலை எந்த நேரத்தில் வெடி வெடிக்கலாம்?
இந்நிலையில் நேற்று அக்.19ஆம் தேதி சனிக்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த கிர்த்திகை என்பதால் வழக்கம் போல் வெளியூர்களில் இருந்து குடும்பமாக வந்த முருகப் பக்தர்கள் வேண்டுதலுக்காக, கோயில் பிரதான கதவின் முன்புறம் வரிசையாக படுத்துறங்கிய நிலையில், அவர்களை மனிதாபிமானம் அற்ற முறையில் கோயில் ஊழியர்கள் விரட்டி உள்ளனர்.
அப்போது கோயில் ஊழியர்கள் சிலர் படுத்துறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை அவமதித்து, அங்கிருந்து விரட்டி முயன்றதாகவும் அதனால் முருகப் பக்தர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனைத் தொடர்ந்து இது குறித்து கோயில் துணை ஆணையர் உமாதேவி ஈடிவி பாரத்திற்கு பதிலளித்த போது, “ சுவாமிமலை கோயில் யாரும் இரவு தங்க அனுமதிப்பதில்லை. சென்னை ஆணையர் அலுவலகத்துடன் கோயில் சிசிடிவி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால் கோயில் நடை சாற்றப்பட்டு பிறகு யாரையும் அங்கு தங்க அனுமதிப்பதில்லை. இவர்கள் தங்க பிடிவாதம் செய்த நிலையில் அவர்களை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் இருக்கும் இடத்தில் காணப்படும் தண்ணீர் கோயில் உட்புறம் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும் போது வெளியேறியவை” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்