சென்னை: பொது காப்பீட்டு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிலுவை தொடர்பாக மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் அரசு பொது காப்பீட்டு ஊழியர்கள் ஊதிய உயர்வு கடந்த 2022 ஆகஸ்ட் 1 இல் நிலுவையாகி, தற்போது 2 ஆண்டுகள் முடிவடையும் நிலையிலும், அங்கு ஊதியம் மாற்றம் செய்யப்படவில்லையே எனவும், 2023 - 2024-ல் முந்தைய ஆண்டின் நிலைமையை மாற்றி லாபகரமான சேவையை உறுதி செய்துள்ள பொது காப்பீட்டு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தாமதமாவது ஏன்? என்ற கேள்வியை (எண் 79/22.07.2024) எழுப்பி இருந்தேன்.
அதற்குப் பதிலளித்த நிதி அமைச்சரே, இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பொது காப்பீட்டு நிறுவனங்கள் முந்தைய ஆண்டில் ரூ.3,529 கோடி நஷ்டத்தைச் சந்தித்தன. இன்று அந்த நிலைமை மாற்றப்பட்டு, 2023 - 24-ல் ரூ.7,588 கோடி லாபம் ஈட்டும் நிலைக்கு முன்னேறியுள்ளன என்பதை தனது பதிலிலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கான பேச்சு வார்த்தைகள் அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களின் சங்கம் (GIPSA) மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் / பேச்சு வார்த்தை வாயிலாக நடைபெற்று தீர்வு காணப்படுவது நடைமுறை எனவும், அரசிற்கு இதுவரை அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களின் சங்கத்திடமிருந்து முன்மொழிவு ஏதும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ள கருத்தில், லாபகரமாக அரசு பொது காப்பீட்டு நிறுவனங்கள் இயங்குகிற நிலையில், இதர நிதி நிறுவனங்களில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவிட்ட சூழலில், அரசு காப்பீட்டு ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு தாமதமாவது நியாயமல்ல. ஆகையால், உடனடியாக அதற்கான பேச்சுவார்த்தைகளை அங்குள்ள தொழிற்சங்கங்களுடன் துவக்கி தீர்வு காண அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களின் சங்கத்திற்கு அமைச்சகம் அறிவுரை வழங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "இரவு 12 மணிக்கு முன் பயணத்தை திட்டமிடுக"- அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்!