கோயம்புத்தூர்: கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி இலச்சினை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் பங்கேற்றனர்.
இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இலச்சினை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்பி சு.வெங்கடேசன், "மத்திய அரசின் சிபிஎஸ்இ தேர்வு அறிவிப்பில், இந்தி மொழி பாடத்திற்கு 10 சதவீத மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தி அல்லாத மாநில மாணவர்கள் அந்த தேர்வை எழுதினால் எடுத்தவுடன் 10 சதவீத மதிப்பெண்களை இழப்பார்கள், இது இந்தி அல்லாத மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதியாகும்” எனத் தெரிவித்தார்.
மேலும், இது இந்திய ஆட்சி மொழிச் சட்டத்திற்கு எதிரான அறிவிப்பு எனவும், மத்திய அரசின் கல்வி அமைச்சருக்கு இந்த அறிவிப்பை திரும்பப் பெறவும், தேர்வின் விதிமுறைகள் மாற்றியமைக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். உடனடியாக இந்த அநீதியை கலைக்கப்பட வேண்டுமெனவும், இந்தி அல்லாத குறிப்பாக தென் மாநிலங்கள், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், அதில் அமல்படுத்த வேண்டிய விஷயங்களில் கூட நீதிமன்றத்தின் குரலோ, வழக்கறிஞர்கள் குரலோ, மக்களின் குரலோ கேட்கப்படாமல், நாடாளுமன்றத்தில் சட்டங்களில் மாற்றம் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் எனத் தெரிவித்தார். மேலும். 150 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், எந்த விவாதமும் இல்லாமல் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றியதாக தெரிவித்தார். இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வேண்டி நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் போராடி வருவதாகவும், அதை அரசு திரும்பப்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ரயில் பாதைகள், நான்கு வழிச்சாலை பணிகளாக இருந்தாலும், வடமாநிலங்களை ஒப்பிடுகையில் மிக மிக பின்தங்கிய மாநிலங்களாக தென் மாநிலங்கள், அதிலும் குறிப்பாக தமிழகம் உள்ளதாக தெரிவித்தார். உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய வட மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளில் நான்கு வழிச்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட முதலீடுகளில் 5ல் ஒரு பங்கு தான் மத்திய அரசால் தமிழகத்திற்கு செய்யப்பட்டுள்ளது" எனக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பெயரில் மாற்றம் தேவை.. செயல்பாட்டில் எப்படி? புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வு பெற்ற காவல் ஆணையாளர் கூறுவது என்ன?!