செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கண்டிகை வேங்கட மங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு அருகாமையில், 4191 பதிவு எண் கொண்ட அரசு மதுபானக் கடை 24 மணி நேரமும், சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதோடு, மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், கூகுள் பே, பேடி எம் வசதியுடன் பாட்டில்களும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, பள்ளி செயல்படும் காலை நேரத்திலே சட்ட விரோதமாக மதுபானக்கடை செயல்படுவதால், மதுப்பிரியர்கள் காலையிலேயே மது பாட்டில்களை வாங்கி குடித்துவிட்டு, பள்ளியின் அருகாமையில் போதையில் படுத்து உறங்குவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் முகச் சுழிப்புடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பள்ளியின் எதிரே உள்ள கடையின் வாசலில் அரைகுறை ஆடையுடன் மது போதையில் மதுப்பிரியர்கள் விழுந்து கிடக்கின்றனர். இதுபோன்று, அரசு உயர்நிலைப்பள்ளியின் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: "சமூக நீதிக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை".. அன்புமணி ராமதாஸ் காட்டம்! - PMK leader Anbumani ramadoss