திருநெல்வேலி: சென்னை - திருநெல்வேலி இடையே, தென் மாவட்டத்திற்கு இயக்கப்படும் ஒரே வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி துவங்கப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் 1.50 மணிக்கு சென்னை சென்று, மீண்டும் அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.
வழக்கம் போல் நேற்றைய தினம் (பிப்.04) பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்ட வந்தே பாரத் ரயில், தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி ரயில் நிலையத்தை கடந்து வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் திடீரென ரயில் மீது கல்வீசி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் சேதமடைந்துள்ளது. மொத்தம் 9 இடங்களில் கண்ணாடியில் உடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரயில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இருப்புப் பாதை காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உடைந்த கண்ணாடிகளை மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
இதையடுத்து தற்காலிகமாக கண்ணாடிகள் சீரமைக்கப்பட்டு இன்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் வந்தே பாரத் ரயில் சென்னை நோக்கி இயக்கப்பட்டது. ரயில்வே துறை அதிகாரிகளும் கண்ணாடி உடைப்பு சம்பவம் தொடர்பாக ரயில்வே துறை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாரைக்கிணறு - மணியாச்சி இடையேயான இருப்பு பாதையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் இருப்பு பாதை போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடைபெற்றது என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நல்ல வருவாய் ஈட்டி வரும் நிலையில், பயணிகளும் இந்த ரயிலில் பயணிப்பதற்கு அதிக அளவு ஆர்வம் காட்டி வரும் சூழலில், இந்த கல்வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய மேலாளர் பாபா ராஜீவ்குமாரை ஈடிவி சார்பில் தொடர்பு கொண்ட போது, “ரயிலில் சேதமடைந்த பாகங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு இன்று வழக்கம் போல் திருநெல்வேலியிலிருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டுள்ளது. நாளை வார விடுமுறை என்பதால் ரயில் இயங்காது எனவே நாளை முழுமையாக ரயில் சீரமைக்கப்படும். இச்சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.