சென்னை: பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளை மூலம் படித்த மாணவர்களுடன் இணைந்து 'மாற்றம்' என்ற சேவை அமைப்பை கடந்த மே 1ஆம் தேதி தொடங்கினார். அவரோடு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் அறக்கட்டளையில் இணைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் தனது 'மாற்றம்' சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கான உதவி, தேவையுள்ள மாணவர்களுக்கான கல்வி உதவி மற்றும் மருத்துவ உதவி என பல உதவிகளை செய்துவருகிறார். அந்த வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வியாசர்பாடியில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகவா லாரன்ஸ், "நான் செய்கின்ற உதவி அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமா என்று கேட்கிறார்கள். ஆனால், நான் உதவி செய்யப் போகும் இடத்தை கோயிலாக பார்க்கிறேன். அப்படி என்றால் என் மனநிலையை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
ரசிகர்கள் என் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக மதர் தெரசா, வாழும் தெய்வம், கருப்பு எம்ஜிஆர் போன்ற பல பட்டங்களை கொடுக்கின்றனர். அந்த பட்டங்கள் அனைத்தையும் நான் என் மனதில் வைத்துக் கொள்வேன். அதனை ஒரு போதும் தலைக்கு ஏற்றிக் கொள்ள மாட்டேன்" எனக் கூறினார்.
பின்னர் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிக அளவில் இருப்பது குறித்து கேட்டதற்கு, "இளைஞர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை போதைப் பொருட்களின் பழக்கம் உள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவர்களின் பைகளில் போதைப் பொருட்கள் கொண்டு செல்வதாக தெரிய வருகிறது. இவையெல்லாம் தடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக அரசு போதைப் பொருட்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கிறதா என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, அரசியல் ரீதியாக எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்று கூறிய ராகவா லாரன்ஸ், போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தினால் அதில் இருந்து விலகி இருக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாழ்த்துக்கள் என கேள்வி கேட்டதற்கு, "வெற்றி பெற போகிறவர்களுக்கும் வாழ்த்துக்கள். தோல்வி அடைபவர்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என ராகவா லாரன்ஸ் கூறினார். முன்னதாக, கடந்த மாதம் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த வர்ஷினி எனும் மாணவிக்கு, அவர் விரும்பிய படிப்பு படிப்பதற்கான நிதியை, மாணவியின் வீடு தேடிச் சென்று வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "மேடை பாடல் நிகழ்ச்சிகளின் பரிமாணமே லைவ் கான்செர்ட்" - பாடகி சக்திஸ்ரீ கோபாலன் கருத்து!