திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே பரம்பு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். விவசாயம் செய்து வரும் சிவசுப்பிரமணியன் இயற்கை மீது அதிக காதல் கொண்டவர். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் ஊருக்கு அருகில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் புதிய வீடு ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார். இயற்கையை நேசிக்கும் இவருக்கு தான் கட்டபோகும் வீடும் முழுக்க முழுக்க இயற்கை சார்ந்ததாக இருக்க வேண்டும் என எண்ணியுள்ளார்.
வழக்கம் போல் சிமெண்ட், செங்கல், மணல், கற்கள் போன்றவற்றை பயன்படுத்தி வீடு கட்டினால் இயற்கையான சூழல் கிடைக்காது என எண்ணிய அவர், சிமெண்ட் வீட்டை புறக்கணித்து, சிமெண்ட் வீட்டுக்கு பதிலாக முழுக்க முழுக்க மரக்கட்டைகளை பயன்படுத்தி தனது வீட்டை கட்டமைக்க திட்டமிட்டுள்ளார். அப்போது மரச்சிற்ப கலை படித்துள்ள தனது நண்பரான சோமசுந்தரத்தின் நினைவு வரவே, அவரிடம் தனது ஆசையை கூறியுள்ளார்.
மரத்தாலான வீடு: அதேசமயம் அதிக செலவு செய்து கட்டப்படும் வீடு என்பதால், ஏதேனும் குறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சோமசுந்தரம் முதலில் தயக்கம் காட்டியுள்ளார். அப்போது சிவசுப்பிரமணியன் என்ன நடந்தாலும் நடக்கட்டும். நீங்கள் வேலையை தொடங்குங்கள் என சோமசுந்தரத்தை ஊக்கப்படுத்தியுள்ளார். அதன் பின்பு கடந்த 2021ஆம் ஆண்டு வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அடித்தளம் மட்டும் கற்களை சிமெண்ட் மணல் கலவையைக் கொண்டு கட்டியுள்ளனர்.
அடித்தளத்திற்கு மேல் பகுதியில் நான்கு புறத்திலும் சுவர்கள் மற்றும் சீலிங் முழுக்க முழுக்க மரக்கட்டைகளை கொண்டு கட்டத் தொடங்கினர். இதற்காக சிவசுப்பிரமணியன் பல இடங்களில் அலைந்து திரிந்து நேர்த்தியான தரமான மரக்கட்டைகளை தேர்வு செய்து வாங்கிள்ளார். மேலும் பல ஆண்டுகள் வாழப்போகும் வீடு என்பதால் உறுதிக்காக கனமான கட்டைகளை வாங்கியுள்ளார். செங்கலுக்கு இணையாக ஒவ்வொரு கட்டையும் 3 இன்ச் கொண்டதாக வாங்கியுள்ளார்.

பாதுகாப்பு வசதிகள்: அதேபோல் 7 அடி கொண்ட கட்டைகளையும் பயன்படுத்தியுள்ளனர். வீட்டின் சுவர்கள் அனைத்தும் வேம்பு கட்டையாலும், சீலிங் பகுதி முழுக்க தேக்கு கட்டையாலும் கட்டியுள்ளனர். மர சிற்பக் கலையில் கைத்தேர்ந்த கலைஞரான சோமசுந்தரம், தான் அமைக்கும் முதல் மரக்கட்டை வீடு என்பதால் பார்த்து பார்த்து மிக நேர்த்தியாக வீட்டை கட்டியுள்ளார். மொத்தம் சுமார் 500 சதுர அடி பரப்பளவில், போர்டிகோ, வரவேற்பறை, ஒரு படுக்கை அறை மற்றும் சமையலறை என சாதாரண வீடு போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மரக்கட்டைகளுக்கு இடையே வாட்டர் ப்ரூப் பேஸ்ட் பயன்படுத்தியுள்ளனர். கூடுதல் பாதுகாப்புக்காக வீட்டின் சீலிங் பகுதிக்கு மேல் மண் ஓடும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலும் சிமெண்ட் வீடு கட்டும்போது நான்கு பக்கமும் காலம் பாக்ஸ் (Column Box) எனப்படும் கான்கீரிட் தூண்கள் அமைக்கப்படுவது வழக்கம். இது தான் கட்டிடத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்யும் என்கிறார் சோமசுந்தரம்.
தீ தடுப்பு: வீட்டின் உறுதித்தன்மைக்காக நான்கு பக்கமும் அதிகபட்சம் 5 இஞ்ச் கனம் கொண்ட மரக்கட்டைகளால் தூண் அமைத்துள்ளார். மேலும் படுக்கை அறையில் துணி உள்ளிட்ட பொருட்களை வைத்து எடுப்பதற்கு வசதியாக அதே மரக்கட்டைகளை கொண்டு அலமாரியும் (Cup board) அமைத்துள்ளனர். சிலிண்டர் அடுப்பு பயன்படுத்துவதால் தீ பாதுகாப்பிற்காக சமையலறை மேடை மட்டும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் வீடு: அது தவிர மீதமுள்ள அனைத்து இடங்களிலும் மரக்கட்டைகள் கொண்டு வடிவமைத்துள்ளனர். மொத்தமாக 6 ஆயிரம் சதுர அடி அளவுக்கு மரக்கட்டைகளை பயன்படுத்தியுள்ளனர். தற்போது வீட்டின் 90 சதவீத பணிகள் முடிவடைந்ததாகவும், இன்னும் பினிசிங் ஒர்க் மட்டும் பாக்கி உள்ளதாகவும், அதையும் விரைந்து முடித்து அடுத்த மாதம் கிரகப்பிரவேசம் செய்ய உள்ளதாக கூறுகிறார் சிவசுப்ரமணியன்.
இது குறித்து வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "நான் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இயற்கை சார்ந்த சூழலில் வாழ வேண்டும் என்பதற்காக இந்த மரக்கட்டை வீட்டை தேர்வு செய்தேன். முதலில் குடும்பத்தினர் தயங்கினார்கள். தற்போது வீடு மிக அழகாக வந்துள்ளது. எனவே எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். மரக்கட்டையால் கட்டப்பட்ட வீடு என்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. ஊர் மக்கள் முதலில் வேடிக்கையாக பார்த்தார்கள். ஆனால் தற்போது அவர்களே வியப்போடு பார்க்கிறார்கள்” என்றார்.
எப்போதும் ட்ரெண்ட் மாறாது: தற்போதுள்ள டிஜிட்டல் காலத்தில் வீடு கட்டுவது என்பது ஒருவித பேஷனாக மாறி உள்ள நிலையில், இந்த காலத்தில் இது போன்று மரக்கட்டை வீடுகளை கட்டி உள்ளீர்களே என கேட்டபோது, நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் சிவசுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். அதாவது கான்கிரீட் வீடுகளைப் பொறுத்தவரை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை டிரெண்ட் மாறும். ஆனால் இந்த மரக்கட்டை வீடு என்பது எப்போதும் ட்ரெண்டு மாறாது.
மதிப்பு அதிகரிக்கும்: "கான்கிரீட் வீடுகளை உடைத்தால் அதிலிருக்கும் செங்கல், மணல், சிமெண்ட் போன்றவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. ஆனால் 100 ஆண்டுகள் கழித்து இந்த மர வீட்டை பிரித்தால் கூட இதில் இருக்கும் கட்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். நான் எனது முன்னோர்கள் விட்டு வைத்த சில பழமையான கற்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தினேன். அது போல நான் இந்த மர வீட்டை விட்டு சென்றால் எனது பேரக் குழந்தைகள் இதை பிரித்து பயன்படுத்தி கொள்வார்கள். மரக்கட்டைகளை பொறுத்தவரை ஆண்டுகள் செல்ல செல்ல மதிப்பு கூட தான் செல்லும்" என பெருமையோடு தெரிவித்தார்.
இது குறித்து மர சிற்பக் கலைஞர் சோமசுந்தரம் நம்மிடம் கூறுகையில், "மரக்கட்டைகளை கொண்டு வீடு கட்ட வேண்டும் என சிவசுப்பிரமணியன் முதலில் சொன்ன போது பல ஆண்டுகள் வாழக்கூடிய வீடு, பல லட்சம் செலவு செய்ய வேண்டும் என்பதால் ஏதேனும் தவறு நடந்து விடக்கூடாது என்பதால் தயக்கம் ஏற்பட்டது. ஆனால் அவர் மரக்கட்டையால் வீடு கட்ட வேண்டும் என உறுதியாக இருந்தார். அதன் பிறகே வேலையை தொடங்கினேன். சிமெண்ட், மணல் கொண்டு கட்டப்படும் வீடுகளில் அதிக வெப்பம் ஏற்படும்.
100 ஆண்டுகளை தாண்டி உழைக்கும்: ஆனால் இந்த மரக்கட்டை வீட்டில் வெப்பம் தடுக்கப்பட்டு குளிர்ச்சி நிலவும். உடலுக்கு ஆரோக்கியமும் கூட. அதேபோல் பராமரிப்பு செலவும் மிக மிக குறைவு. சிமெண்ட் மற்றும் மணலான வீட்டிற்கு ஆண்டு தோறும் பெயிண்ட் அடிக்கும் செலவு அதிகம் ஏற்படும். ஆனால் இந்த மரக்கட்டை வீட்டிற்கு அதுபோன்ற செலவுகள் இல்லை. கான்கிரீட் வீடுகள் 40 ஆண்டுகள் தான் உழைக்கும். ஆனால் இந்த மர வீடு 100 ஆண்டுகளை தாண்டி உழைக்கும். வெளிநாடுகளில் இது போன்று மரக்கட்டை வீடுகள் அமைப்பது வழக்கம்.
மர வீட்டிற்கான செலவு எவ்வளவு?: தமிழ்நாட்டில் தென் தமிழக பகுதியில் இது போன்ற மரக்கட்டை வீட்டை எனக்கு தெரிந்தவரை யாரும் கட்டவில்லை. இங்கு நான் தான் முதலில் கட்டியுள்ளேன். செலவை பொறுத்தவரை இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. 600 சதுர அடியில் மரக்கட்டையால் வீடு கட்ட 15 லட்சம் முதல் 16 லட்சம் வரை செலவாகும். அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் வீட்டை கட்டி முடித்து விடலாம். ஆனால் பொருளாதார சூழ்நிலை காரணமாக எங்களுக்கு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அனைவரும் இது போன்ற இயற்கை சார்ந்த மர வீடுகளுக்கு மாற வேண்டும்" என்று கூறினார்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை சூழலோடு அமைந்துள்ள பரம்பு கிராமத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் மரக்கட்டைகளால் சிவசுப்பிரமணியன் அமைத்துள்ள வீடு பார்ப்போரை கவர்ந்துள்ளது. இயல்பாகவே சிமெண்ட், மணல், கற்களை கொண்டு கட்டப்படும் சுவர்களில் இருந்து, அதிக வெப்பம் வெளிப்படும். இதுதவிர தற்போது நாகரீகம் என்ற பெயரில் நவீன டைல்ஸ் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு வீடு அலங்கரிக்கப்படுகிறது.
இதனால் கோடை காலத்தில் வீட்டுக்குள் அதிக வெப்பம் ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமான வெயில் பதிவாவதால் வீட்டிற்குள் அனல் தாங்க முடியாமல் மக்கள் அவதி அடைவதை காண முடிகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் சிமெண்ட் வீட்டை புறக்கணித்து, அதற்கு இணையான பொருள் செலவில் மரக்கட்டையினாலான வீட்டை கட்டமைத்துள்ள சிவசுப்பிரமணியனின் இயற்கை மீதான ஆர்வத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 100 வருடங்கள் வரை காய்க்கும் அரேபிய பேரிச்சை.. தருமபுரியில் அசத்தும் விவசாயி!