சென்னை: அதிமுக ஆட்சி காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதியில் மின்சார வாரியத்தில் 6,000 கோடி ரூபாய் அளவிற்கு முறைக்கேடு நடந்ததாகவும், அதில் அதானி நிறுவனம் மட்டுமே ரூபாய் 3000 கோடி முறைகேடு செய்ததாகவும் அறப்போர் இயக்கம், லஞ்ச ஒழிப்பு துறையில் கடந்த 2018 ஆம் ஆண்டு புகார் கொடுத்தது.
அந்த புகாரில் '' கடந்த 2014ல், இந்தோனேஷியாவில் இருந்து, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கப்பல் வாயிலாக நிலக்கரி வந்தது. ஒரு கிலோவுக்கு 6,000 கலோரி வெப்பத்தை வெளிப்படுத்தும் உயர் ரக நிலக்கரிக்கு மின் வாரியம் ஆர்டர் கொடுத்திருந்தது. ஆனால், சப்ளை செய்த நிலக்கரி, 3,500 கலோரிகள் மட்டுமே வெப்பம் தரும் தரம் குறைந்த ரகமாக இருந்தது'' என கூறப்பட்டிருந்தது.
மேலும், இந்தோனேஷிய நிறுவனத்திடம் மலிவான விலைக்கு நிலக்கரியை வாங்கிய அதானி குழுமம், அதை உயர்ந்த தரம் எனக்கூறி மும்மடங்கு அதிகமான விலைக்கு மின்வாரியத்துக்கு விற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. அதோடு, பல நாடுகளின் வழியாக அது வந்து சேர்ந்ததாக கணக்குகாட்டி, அதிகமான போக்குவரத்து கட்டணமும் வசூலித்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தது.
அதே ஆண்டில், இதுபோல 24 கப்பல்களில், தரம் குறைவான நிலக்கரி வந்துள்ளது என்றும் தரம் குறைவான நிலக்கரியை உயர் தர நிலக்கரி என சான்றளிக்க, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது" எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், "டன்னுக்கு 2,300 கொடுத்து வாங்கிய நிலக்கரியை 7,650 ரூபாய் கொடுத்து தமிழக மின் வாரியம் வாங்கியுள்ளது" என புகாரில் குற்றம் சாட்டப்பட்டது.
"கடந்த 2017ல் வெளியிடப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கையிலும் இந்த நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நிலக்கரி இறக்குமதிக்கான டெண்டரில் மோசடி நடந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது" என்று அறப்போர் இயக்கத்தின் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக ஆட்சி மாற்றத்திற்கு பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை 2023 ஜனவரியில் இந்த புகாரில் முகாந்திரம் உள்ளது என்றும் அதனால் அதை விசாரிக்க அனுமதி கோரியும் தமிழக அரசிடம் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17-க்கு கீழ் அனுமதி கோரியது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து முதற்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: "கள்ளச்சாராயத்தில் 8.6 - 29.7% மெத்தனால் கலந்துள்ளது" - கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஐகோர்ட்டில் அரசு பகீர் தகவல்!