சென்னை: சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வரும் ஜாபர் சாதிக்கிற்குச் சொந்தமான குடோனில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று (மார்ச் 14) சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனை நேற்று இரவு முடிவடைந்தது.
இந்நிலையில், குடோனில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் சில பொருட்களை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பையில் போட்டு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த குடோனில் இருந்து எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளது என்பது குறித்தான விவரங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்ள இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் டெல்லியில் வைத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் கடத்தல் தொழிலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது.
பின்னர், ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து, 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் தொழிலுக்கு உடந்தையாக செயல்பட்ட திருச்சியைச் சேர்ந்த சதானந்தன் என்பவரை, கடந்த மார்ச் 12ஆம் தேதி சென்னையில் வைத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜாபர் சாதிக்கிற்குச் சொந்தமான சென்னை குடோனில் வைத்துதான் உணவுப் பொருட்கள் பெயரில் போதைப் பொருட்களை பொட்டலங்கள் செய்து வெளிநாடுகளுக்கு கடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
ஜாபர் சாதிக் கடந்த மூன்று ஆண்டுகளில் 45 முறை ரூ.2,000 கோடிக்கு மேல் போதைப் பொருட்களைக் கடத்தியதும் தெரிய வந்துள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், சதானந்தத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மின்சாதனங்களை இடம் மாற்றம் செய்வதற்கான கட்டணம் 5% ஆக குறைப்பு - TANGEDCO அறிவிப்பு!