சென்னை: சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக சென்னை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் செங்குன்றம் குடோனில் வைத்து மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பைசல் ரகுமான், சையது இப்ராஹிம், சென்னையைச் சேர்ந்த மன்சூர் என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து சுமார் 70 கோடி மதிப்புடைய 6.92 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் என்கிற போதைப் பொருள் மற்றும் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருளை ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. கைதான ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசூல் ரகுமான், சையது இப்ராஹிம் மற்றும் சென்னையைச் சேர்ந்த மன்சூர் ஆகியோருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்குன்றம் பகுதியில் குடோன் நடத்தி வந்த மன்சூர் மூலமாகவே போதைப் பொருளை பதுக்கி வைத்து, பிறகு ரயில் மூலமாக ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, சையது இப்ராஹிம் கூட்டாளி மூலம் போதைப்பொருள் மணிப்பூரில் இருந்து செங்குன்றம் கொண்டு வரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் மணிப்பூரில் உள்ள போதைப்பொருள் கும்பல் குறித்தும், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதேபோல் ஏற்கனவே இவர்கள் போதைப் பொருளை இதே பாணியில் இலங்கைக்கு கடத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இதில் கைது செய்யப்பட்ட சையது இப்ராஹிம் என்பவர், ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவராக இருந்தார். இதனால் அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரியாணி மேன் யூடியூபர் அபிஷேக் கைது.. காரணம் இதுவா?