சென்னை: சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், 'தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் நேற்று அறிமுகம் செய்துள்ளார். அந்த கொடியில் சட்டத்திற்கு புறம்பாக கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் அரசு சின்னமான யானை சின்னம் இடம்பெற்றுள்ளது.
மேலும் வெள்ளாளர் சமூகத்தில் பயன்படுத்தி வரும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியின் நிறமும், ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியின் நிறமும், ஈழத் தமிழர்களின் சின்னமாக விளங்கும் வாகை பூவின் சின்னத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு சிவசேனா கட்சியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில், 'சட்டசபை தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் விலங்குகளை சின்னமாக பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது' என்று உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளது. ஆகவே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஆர்டிஐ செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த புகார் மனுவை இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் வாயிலாக அவர் அனுப்பி உள்ளார். நடிகர் விஜயின் கட்சிக் கொடி நே்ற்று அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் கட்சிக் கொடியில் உள்ள யானை சின்னத்தை போன்று, த.வெ.க கொடியிலும் யானை சின்னம் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் த.வெ.க கொடி தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “பட்டால் தான் தெரியும்.. விஜய் பட்டு தெரிந்து கொள்வார்” - தவெக குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு! - karti chidambaram