திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், வாகைகுளத்தைச் சேர்ந்த தீபக் ராஜா என்பவர் கடந்த மே 20ஆம் தேதி பாளையங்கோட்டை அடுத்த கேடிசி நகரில் உள்ள உணவகம் முன்பு ஆறு பேர் கொண்ட கும்பலால் மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்துவந்த நிலையில், இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று தீபக் ராஜா, தனது காதலி மற்றும் அவரது தோழிகளுக்கு திருமண பார்ட்டி கொடுப்பதற்காக உணவகத்திற்கு வந்து, அனைவரும் உணவு அருந்திவிட்டு, தீபக் ராஜா மட்டும் அவர்கள் வந்த காரை எடுப்பதற்காக உணவகத்திற்கு வெளியே தனியாக சென்றுள்ளார்.
அப்போது, உணவகத்திற்கு வெளியே இருந்த மர்ம கும்பல், தீபக் ராஜாவை ஓட ஓட விரட்டி முகத்தை மட்டும் குறி வைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து, இச்சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர காவல் ஆணையர் மூர்த்தி உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக நெல்லை முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த ஐயப்பன், நெல்லையைச் சேர்ந்த முத்து சரவணன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் தம்பான் ஆகிய நான்கு பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நான்கு பேரும் நேரடியாக இந்த கொலையில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது. அதனை அடுத்து, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தொடர்ச்சியாக தேடிவந்தனர்.
இந்த நிலையில், தீபக் ராஜா கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறி, நவீன், லெப்ட் முருகன், லட்சுமிகாந்த் மற்றும் சரவணன் என்ற மேலும் 4 பேரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர். இவர்களை தனிப்படை போலீசார் பிடிக்க முயன்ற போது நவீன் மற்றும் லெப்ட் முருகன் ஆகிய இருவரும் தப்பியோட முயன்றதாகவும், அப்போது கீழே விழுந்ததில் இருவரும் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், தப்பிக்கும் முயற்சியில் கீழே விழுந்ததாகக் கூறப்படும் நவீன் மற்றும் முருகன் ஆகிய இருவரையும், போலீசார் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருவதாகவும், இதுவரை இந்த வழக்கு தொடர்பாக எட்டு பேர் பிடிபட்டு நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையின் புதிய முயற்சி.. என்ன தெரியுமா?