விருதுநகர்: சாத்தூர் பந்துவார்பட்டி தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (ஜூன் 29) காலை ஏற்பட்ட இந்த பயங்கர வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR | pic.twitter.com/96yDkWArMA
— TN DIPR (@TNDIPRNEWS) June 29, 2024
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (45), நடுச்சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி (40), வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (35) மற்றும் மோகன் (30) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உடல் கருகி பலி - ஆலை உரிமையாளருக்கு வலைவீச்சு! - Sattur firecracker explosion