வேலூர்: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சின்னி - கோவிந்தன் தம்பதி. இந்த நிலையில், இத்தம்பதிக்கு கடந்த ஜூலை 27ஆம் தேதி இரவு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து, மகப்பேறு சாதாரண வார்டுக்கு குழந்தையுடன் சின்னி மாற்றப்பட்ட நிலையில், 31ஆம் தேதி காலை8 மணி அளவில் சின்னியின் கணவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு, வார்டுக்கு வெளியேச் சென்றுள்ளார். அப்போது, சின்னு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தை அழுததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வார்டில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சின்னியிடம் பேச்சு கொடுத்து குழந்தையை பார்த்துக் கொள்வதாக கூறி சின்னுவை சாப்பிடச் சொல்லிவிட்டு குழந்தையை தாலாட்டுவது போல் வார்டுக்கு வெளியே வந்துள்ளார். தொடர்ந்து, இடையன்சாத்து பகுதியைச் சேர்ந்த ஜெயந்திமாலா (38) என்பவர், பெண் குழந்தையை துணிப்பையில் போட்டு கடத்திச் சென்றது தெரியவந்து.
![Vellore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-08-2024/22106281_vl.jpg)
இந்த விவகாரத்தில் வேலூர் தனிப்படை போலீசார் இணைந்து சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையை பிரசவ வார்டிலிருந்து கட்டைப்பையில் கடத்தி இடையஞ்சாத்து பகுதியிலிருந்து கர்நாடக மாநிலம் சிக்பல்லபூருக்கு கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, தனிப்படை பேலீசார் கர்நாடக மாநிலம் சிக்பல்லபூருக்கு விரைந்து, லீலாவதி என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், பெங்களூரைச் சேர்ந்த அஜய்குமார் - ஐஸ்வர்யா தம்பதிக்கு திருமணமாகி நீண்ட காலமாகவே குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரான லீலாவதி என்பவரிடம் பணம் கொடுத்து தங்களுக்கு ஏதேனும் ஒரு குழந்தையை வாங்கித் தருமாறு கூறியுள்ளனர்.
எனவே, பணத்தை பெற்றுக்கொண்டு அந்த பணத்தை அம்மு என்ற ஞானமணி மற்றும் அவரது கணவர் பாதர் சாலமன் செல்லதுரை என்பவர்களிடம் கொடுத்து, அவர்கள் குழந்தையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், லீலாவதி பணத்தை கேட்கவே அம்மு, இடையஞ்சாத்து என்பவர் எதேனும் ஒரு குழந்தையை ஏற்பாடு செய்து தரும்படி, அதே இடையஞ்சாத்து பகுதியைச் சேர்ந்த வைஜெயந்தி மாலா, வெங்கடேசன் என்பவரை வைத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமணை பிரவச வார்டிலிருந்து ஏதேனும் ஒரு குழந்தையை திருடி எடுத்து வரச் சொல்லியுள்ளார்.
இந்த நிலையில்தான், சின்னியின் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்தி, இடையஞ்சாத்து கொண்டு சென்று அம்முவிடம் ஒப்படைத்து, பின் அம்மு, அம்முவின் கணவர் செல்லதுரை மற்றும் அம்முவின் அக்கா மகன் பிரவின் செல்வன் ஆகியோர், இடையஞ்சாத்திலிருந்து காரில் குழந்தையை கர்நாடக மாநிலம் சிக்பல்லபூருக்கு கடத்திச் சென்று லீலாவதியிடம் குழந்தையை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர், தனிப்படை போலீசார் லீலாவதியிடமிருந்து குழந்தையை மீட்டு பரிசோதித்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குழந்தை வேலூர் கொண்டு வரப்பட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, குழந்தையை கடத்தியது மற்றும் உடந்தையாக இருந்ததாக மாலா வைஜெயந்தி மாலா, பாதர் செல்லதுரை சாலமன், அம்மு என்ற ஞானமணி, பிரவின் செல்வன், லீலாவதி, சிக்பல்லபூரைச் சேர்ந்த அஜய்குமார் மற்றும் ஜஸ்வர்யா ஆகிய 7 பேரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், குழந்தை கடத்தப்பட்ட 24 மணிநேரத்திற்குள் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அப்போது, பெற்றோர் கண்ணீர் மல்க காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். அதேநேரம், 24 மணி நேரத்திற்குள் குழந்தையை தாயிடம் ஒப்படைத்த வேலூர் போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகமும், பொதுமக்களும் நன்றியைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வீட்டிலே பிறந்த குழந்தை.. வலிப்பால் அவதிப்பட்ட தாய்.. மதுரை ராஜாஜி மருத்துவமனை செய்த அசாத்தியமான சாதனை!