விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜூன் 14) காலை 10 மணிக்கு தொடங்கியது. வரும் 21-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-இல் நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் உள்ளதால், அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் வேட்பாளர்: இந்தநிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 8.19 சதவீதம் வாக்கு பெற்று மாநில கட்சியாக அந்தஸ்து பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.
யார் இந்த அபிநயா?: இளங்கலை சித்த மருத்துவம் படித்துள்ள மருத்துவர் அபிநயா, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு 65 ஆயிரத்து 381 வாக்குகள் பெற்றார். அதாவது மொத்தம் பதிவான வாக்குகளில் 5.2 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி அவருக்கு இடைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கியுள்ளது.
மற்ற கட்சிகளின் நிலை என்ன? விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் ஓரிரு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக, பாஜக இன்னும் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கே ஆதரவு: இந்திய குடியரசு கட்சி திட்டவட்டம்!