ஈரோடு: ஈரோட்டில் மாநகராட்சி சார்பில் வஉசி பூங்கா, காய்கனி மார்க்கெட், சோலார் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதியில் வளர்ச்சி திட்டம் குறித்து மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். வஉசி பூங்காவில் புதிய வடிவமைப்பில் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டம் குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் கேட்டறிந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழக அரசு போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து முழுமையாக நடவடிக்கை எடுத்து வருவதால் தான் குற்றவாளிகள் கைது நடவடிக்கை அதிகமாக உள்ளது. கட்சி சார்பு இல்லாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கோடிக் கணக்கான தொண்டர்கள் திமுகவில் உள்ள நிலையில் யாரோ ஒருவர் தவறு செய்தால் மொத்தமாகக் கட்சியைக் குறை சொல்வது சரியாக இருக்காது.
நேதாஜி மார்க்கெட்: மாவட்டத்திற்கு மொத்தமாக 7 முதல் 8 மார்க்கெட்டுகள் வர இருக்கிறது. அதனால் இந்த நேதாஜி மார்க்கெட் வருமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
மதுபாட்டில்கள் திரும்பப் பெறுதல்: தமிழகத்தில் அனைத்து மதுபான கடைகளிலும் விற்பனை செய்யக்கூடிய மதுபாட்டில்களில் காலி மதுபான மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் நீதிமன்ற வழிகாட்டு படி நடைமுறைப்படுத்தப்படும், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் ஒப்பந்தத்தில் சிறு முறைகேடுகள் கூட தவறுகள் நடக்காத வகையில் துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதையும் படிங்க: தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!