சென்னை: சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஜெர்மன் நாட்டு பயணி உட்பட இரண்டு பயணிகள் சாட்டிலைட் போன்கள் வைத்திருப்பதாக கூறி, விசாரணை நடத்தியதில் அது நீர்நிலைகளை அறிவதற்கான கருவிகள் என தெரியவந்துள்ளது.
சென்னையில் இருந்து சேலம் செல்லும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்' நேற்று (மார்ச் 10) சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகியுள்ளது. அந்த விமானத்தில் 64 பயணிகள் பயணிக்க இருந்தனர். விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனை செய்து அனுப்பினர்.
இந்நிலையில், இந்த விமானத்தில் சேலம் செல்வதற்காக ரஷ்யா நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய பயணியும், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பயணியும் வந்துள்ளனர். அப்பொழுது அவர்களது உடைமைகளை சோதனை செய்த அதிகாரிகள், அவர்களிடம் சாட்டிலைட் போன் இருப்பதாக கூறி அந்த பொருளை கப்பற்றி விமான நிலைய போலீஸ் அதிகாரிடம் ஒப்படைத்தனர்.
நமது நாட்டில் சாட்டிலைட் போன் உபயோகிக்க பாதுகாப்பு காரணங்களுக்காக, ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் பயணிகள் பயணம் செய்ய முயன்றது, பாதுகாப்பு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,அவரின் பயணத்தை ரத்து செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் தாங்கள் புவியியல் ஆராய்ச்சியாளர்கள், இது அதற்கான வசதியுடன் கூடிய கருவிகள்தான், தாங்கள் இருவரும் ப்ராஜெக்ட் சம்பந்தமாக சேலம் செல்கிறோம் என்று கூறினர். இதை அடுத்து, சென்னை விமான நிலைய போலீசார் தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுவது உண்மைதான், அவர்கள் வைத்திருந்தது சேட்டிலைட் போன் அல்ல என்று தெரியவந்தது.
இதை அடுத்து, அவைகள் சாட்டிலைட் போன்கள் இல்லை என்ற உண்மை தெரிய வந்ததால், போலீசார் இருவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் விடுவித்தனர்.
இதையும் படிங்க: "ஜாபர் சாதிக்குடன் மு.க.ஸ்டாலினின் குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது" - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!