மதுரை: மதுரையில் இருந்து அயோத்திக்கு இண்டிகோ விமானம் மூலம் சுற்றுலா அழைத்து செல்வதாகக்கூறி, சேலம் ஜே.பி. டிராவல்ஸ் என்ற நிறுவனம் 100 பேரிடம் 5 நாட்கள் பேக்கேஜாக தலா 29 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு இன்டிகோ விமானம் மூலம் மதுரையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து அயோத்தி செல்வதற்காக 106 பயணிகள் விமான நிலையம் வந்தடைந்தனர்.
விமான நிலையம் வந்தடைந்த 106 பயணிகள் அனைவரும் பெங்களூரு செல்ல இண்டிகோ நிர்வாகத்திடம் கேட்டனர். ஆனால், இப்பயணத்துக்கான டிக்கெட்டுகள் எதுவும் புக் செய்யப்படவில்லை என அதிகாரிகள் கூறியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பயணிகள் அனைவரும் தங்களது உடமைகளுடன் விமான நிலையத்தில் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
இதனை தொடர்ந்து சேலம் ஜே.பி. டிராவல்ஸ் நிறுவனத்தின் மேலாளார் ராஜா, பயணிகளிடம் கலந்து பேசி, வரும் 18 ஆம் தேதி 106 பயணிகளையும் அயோத்தி அழைத்து செல்வதாக கூறியதையடுத்து பயணிகள் சமாதானம் அடைந்தனர். பின்னர் 106 பயணிகளும் சேலம் புறப்பட்டு சென்றனர்.
இது தொடர்பாக இண்டிகோ ஏர்லைன்ஸை தொடர்புகொண்டபோது பதிலளிக்கவில்லை. அதேநேரம், ஜேபி நிறுவனத்தாரின் மொபைல் எண்கள் செயல்பாட்டில் இல்லை.
இதையும் படிங்க: மத்திய அரசின் இலவச வீடு திட்டத்தில் மோசடி.. வங்கியில் பணம் எடுக்க சென்ற பெண் அதிர்ச்சி..