சேலம்: சேலத்தில் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தி நடைபெற்று வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, பள்ளப்பட்டி, சிவதாபுரம், சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான நபர்கள் வெள்ளி பொருள்கள் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு வெள்ளி கொலுசு, அரைஞாண் கொடி, குங்கும சிமிழ், குத்து விளக்கு உள்ளிட்ட பொருள்களும் ஆண்கள் அணியும் மோதிரம், பிரேஸ்லெட் உள்ளிட்ட பொருள்களை அழகுற வடிவமைத்து தமிழகம் மட்டுமல்லாமல் வட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக நாள்தோறும் அனுப்பி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கைத்தறி நெசவு தொழிலுக்கு அடுத்தபடியாக வெள்ளிப் பொருட்கள் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஆனால் கரோனா காலத்திற்கு பிறகு வட இந்திய மாநிலங்களில் இருந்து வரும் ஆர்டர்கள் வெகுவாக குறைந்து விட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது சேலம் வெள்ளி பொருள் உற்பத்தியாளர்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், மத்திய அரசின் ஜிஎஸ்டி காரணமாக, சேலத்தில் வெள்ளிக் கொலுசு மற்றும் ஆபரணங்கள் உற்பத்தி நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதாக உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் இத்தொழிலில் ஈடுபடும் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்தராஜ் பேசுகையில்,"தேர்தலைக் காரணம் காட்டி கடந்த காலங்களில் வெள்ளி உற்பத்தி பொருட்களைத் தேர்தல் துணை அதிகாரிகளும், காவல்துறையினரும் பறிமுதல் செய்தனர். இதனால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
முறையான ஆவணங்கள் இருந்தும் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை இருந்தும் தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் வெள்ளிப் பொருட்களைப் பறிமுதல் செய்ததால் பெரும் பொருளாதார இழப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டது. தினக் கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்கள் அதில் மிகவும் பாதிப்படைந்தனர்.
வெள்ளிக் கொலுசு உற்பத்தி மத்திய அரசின் கைவினைப் பொருள் துறையில் இணைக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி நடைபெறும் பகுதிகளில் தேர்தல் அலுவலர்கள் வெள்ளி பொருட்களைப் பறிமுதல் செய்வதைக் கைவிட வேண்டும். முதலாளிகளிடமிருந்து வெள்ளியை உருக்கி தனித்தனி உபபொருட்களாக கூலி தொழில் செய்து வரும் எங்களைத் தேர்தல் அதிகாரிகள் வஞ்சிக்கக் கூடாது.
இதுகுறித்த நடைமுறைகளை மாவட்ட தேர்தல் அதிகாரி சுற்றி அறிக்கையாக அனைத்து அலுவலர்களுக்கும் அனுப்ப வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரு மாதத்தில் திருமணம்.. பல் சிகிச்சைக்காக சென்ற இளைஞர் திடீர் மரணம்.. நடந்தது என்ன?