கோயம்புத்தூர்: மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன திருமடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக, ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக ஆதீனத்தின் இளைய சகோதரர் விருத்தகிரி, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, “தஞ்சை மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்த வினோத், திருவெண்காடு சம்பா கட்டளையைச் சேர்ந்த விக்னேஸ்வரன், நெய்க்குப்பை சேர்ந்த ஸ்ரீநிவாஸ், செம்பனார்கோயிலில் உள்ள கலைமகள் பள்ளியின் நிறுவனர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசந்திரன், தருமபுரம் ஆதீனத்தில் புகைப்படக் கலைஞராக வேலை பார்த்த பிரபாகரன், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் ஆகியோர் செல்போன் மூலமும், வாட்ஸ் அப் மூலமும் தொடர்பு கொண்டனர்.
அதில், தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ தங்களிடம் உள்ளதாகவும், கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், ஆடியோ வீடியோக்களை தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர். மேலும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் கொலை செய்வதாக மிரட்டினர். எனவே, தொடர்புடையோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, புகாரில் குறிப்பிடப்பட்ட வினோத், செந்தில், ஸ்ரீநிவாஸ், விக்னேஷ், குடியரசு, அகோரம் ஆகியோர் மீது, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 323, 307, 389, 506 (2), 120பி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தருமபுர ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதாக பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரைக் கண்டித்து கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி மற்றும் சின்னியம்பாளையம் உள்பட புறநகர் பகுதியில், சைவ வழிபாட்டு நெறிக் கழகத்தினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அதில், “ஆபாச வீடியோ தயாரித்து, மரியாதைக்குரிய தருமபுரம் ஆதீனம் அவர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த பாஜகவைச் சார்ந்தவர்களை கண்டிக்கிறோம்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திருக்கோவிலூர், விளவங்கோடு இடைத்தேர்தல் எப்போது? - சத்யபிரதா சாகு விளக்கம்!