கோவை: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எஸ்.விஜயதாரணி கோவை விமான நிலையத்தில் நேற்று (பிப்.25) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'பிரதமர் மோடி வழிகாட்டுதலில், ஜே.பி.நட்டா தலைமையில் பாஜகவில் என்னை இணைத்துக் கொண்டேன். பல ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய நபர் நான். பெண்களுக்கான தளம் என்பது காங்கிரஸ் கட்சியில் மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.
கடந்த 14 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியில் என்னைத் தவிர வேறு எந்த பெண்ணும் சட்டமன்ற உறுப்பினராகக் கூட இருக்கவில்லை. மேலும் என்னைக் கூட, தக்க வைத்துக்கொள்ளாத அளவிற்கு தான் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் இருந்தன. காங்கிரஸ் கட்சி பெரும் சங்கடங்களையும்; குறிப்பாக, அரசியல் தளத்தில் பணியாற்றும் பெண்களுக்கு சிரமத்தையும் உண்டாக்குகிறது.
மாணவராக இருந்த காலம் தொடங்கி, 37 ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்துள்ளேன். ஆனால், இப்போது இந்த முடிவுக்கு வந்துள்ளேன் என்றால் நீங்களே அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், தலைமை பதவிகள் என்று வந்தால் பெண்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் தவறானது.
பெண்களால் தலைமை பதவிக்கு வர முடியாதா? இதில் அவநம்பிக்கை கொண்டவர்கள் தான் காங்கிரஸ் கட்சியினர். இத்தனை ஆண்டு காலம் கட்சியிலிருந்த எனக்கே அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்றால், இளம்பெண்கள் எவ்வாறு அந்த கட்சிக்கு செல்வார்கள். இதே பாஜகவை எடுத்துக் கொண்டால், நாடாளுமன்றத்தில் அதிக பெண் எம்.பி-க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
பெண்களுக்கும் தலைமைப் பண்பு இருக்கிறது என்பதை உணர்ந்த கட்சி பாஜக தான். மேலும் பிரதமர் மோடி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை சட்டமாக்கி உள்ளார். இஸ்லாமியர்களின் 'முத்தலாக்' நடைமுறையை ஒழித்தவர். இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வாங்கித் தந்துள்ளார். இஸ்லாமியப் பெண்கள் யாருக்கு ஓட்டுப்போட சொன்னாலும் போட மாட்டார்கள். அவர்கள் உறுதியாக பாஜகவிற்குத் தான் ஓட்டுப் போடுவார்கள்.
அவர்களது மனதை யாராலும் மாற்ற முடியாது. இவ்வாறு பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்த பாஜகவும், பிரதமர் மோடியும் தான் பெண்கள் மனதில் இருக்கிறார்கள். பெண்களே வேண்டாம் என்று துரத்துகின்ற காங்கிரஸ் கட்சியில் எவ்வாறு செயல்படுவது. காங்கிரஸ், இந்த முறையாவது 33 சதவிகிதம் பெண்களுக்கு இடமளிப்பார்களா?' எனக் கேள்வியெழுப்பினார்.
மேலும் பேசிய அவர், 'காங்கிரஸ் ஆளும் சில மாநிலங்களில் மத்திய அரசின் சில திட்டங்கள் கொண்டு சேர்க்கப்படவில்லை. தமிழ்நாடும், மேற்குவங்கமும் அதனை நிறைவேற்றவில்லை. மேலும், மக்களுக்கு சேரவேண்டிய விஷயங்களை அரசியல் கருதித் தடுக்காதீர்கள். அதனை முதலில் அமல்படுத்துங்கள். அதனைத் தாண்டி, மக்களுக்கு விருப்பம் உள்ளவர்களாக காண்பித்து ஜெயிக்க முடிந்தால் ஜெயித்துக் காட்டுங்கள். அதுதான் என்னுடைய நிலைப்பாடு.
மக்கள் என்னை நம்பி வாக்களித்தாலும், மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் போய் சேர்வதில்லை. அதனை எவ்வாறு சேர்ப்பது? அதைக்கொண்டு சேர்க்க வேண்டும் என்றால், பாஜகவுடன் இருந்தால்தான் சேர்க்க முடியும். கன்னியாகுமரியில் நாற்கரச் சாலையை இத்தனை ஆண்டுகளாக யாரும் போடவில்லை. தற்போது, 4 ஆண்டுகளாக காங்கிரஸ் எம்.பி தான் அங்கு உள்ளார். அவரும் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
மேலும், மத்திய அரசுத் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றால், ஆளும் கட்சியுடன் இருந்தால்தான் அது முடியும். நாட்டின் வளர்ச்சி பன்மடங்காக வேண்டும், தனிநபர் வருமானம் உயர வேண்டும். தமிழ்நாட்டை தற்போது முன்னேறிய மாநிலமாகக் கருதுகிறோம். அதேசமயம், மத்திய அரசுத் திட்டங்கள் எல்லாம் மக்களிடம் சேர்ந்தால்தான் இந்த வளர்ச்சி தொடரும்.
அது இல்லாத பட்சத்தில், தமிழ்நாடு 10 வருடங்களில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, பின்தங்கிய மாநிலமாக மாறிவிடும். மேலும் இது மக்கள் விரோதப்போக்கு. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்குப் பதவி தராதது மட்டும் நான் விலகக் காரணம் அல்ல. எங்கள் மாவட்டத்தின் வளர்ச்சி, தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் ஊழலற்ற அரசாங்கமும் தான்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரை செய்து, நடைப்பயணம் மேற்கொண்டு இவற்றையெல்லாம் புரிய வைத்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய முயற்சியால் இன்று பெரிய வளர்ச்சியை பாஜக பெற்று இருக்கிறது. அவர்தான் எதிர்க்கட்சியாக இருந்து கேள்விகளை எழுப்புகிறார். அவரைத் தவிர யாரும் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. அவருடைய தலைமையில் வாக்கு சதவிகிதத்திலும் வளர்ச்சிப் பெறும்.
மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தாததால், அது பற்றித் தெரியவில்லை. தமிழ்நாட்டில் தயவு செய்து தேசிய திட்டங்களைச் செயல்படுத்துங்கள். அவ்வாறு செயல்படுத்தும் போது தான், அது நல்லதா? கெட்டதா? எனப் புரியும். பெண்கள் முன்னேற்றத்திற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால், இதுபோல் தான் அனைவரும் அவர்கள் வழியில் செல்லத் தொடங்குவார்கள்.
காங்கிரஸ் கட்சியிலிருந்த போது, அக்கட்சிக்கு ஆதரவாகத் தான் பேசினேன். ஆனால், தவறு எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்பேன். காங்கிரஸ் கட்சியினர் முடிந்தால் அவர்களது கட்சியை வளர்க்க ஆரம்பிக்கட்டும். எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல், காணாமல்போகும் நிலையை அவர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். கட்டாயமாக எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்க வேண்டும். அதைக்கூட இல்லாத அளவிற்கு செய்துவிட்டார்கள்.
காங்கிரஸ் அழிவுப் பாதைக்குச் செல்கிறது என்பதை சீமான் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டு விட்டார். சபாநாயகர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தான், நான் பேசுவதற்கே வாய்ப்பளிப்பார். மக்கள் பிரச்னையைப் பேசுவதற்காகத் தான் சட்டமன்ற உறுப்பினராகவே இருக்கிறோம். ஆனால், மக்கள் பிரச்னையைப் பேச அனுமதிக்காத இடத்தில் சட்டமன்ற உறுப்பினராக இயங்கி வேஸ்ட். எனவே, இனிமேலாவது சபாநாயகர் அனைவருக்கும் பேச வாய்ப்பு தர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் ஜன சேனா கட்சிக் கூட்டம்: சென்னை வாழ் ஆந்திர மக்களின் ஆதரவு கோரி கூட்டம்!