சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாடு தவிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “உலகின் வளரும் மிகப்பெரிய நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தச் சூழலில் அதற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பது போதைப் பொருட்கள். போதைப் பொருட்கள் மூலம் வளர்ச்சியை தடுக்க முடியும், தலைமுறையை அழிக்க முடியும். எனவே, நமது எதிரிகள் அதை ஆயுதமாக பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சியை தடுக்க முயற்சி செய்கின்றனர்.
போதைப் பொருள் எதிர்கால தலைமுறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். தனிநபர் மற்றும் குடும்பத்தை மட்டுமல்ல, சமூகம் மற்றும் ஒரு மாநிலத்தையே போதைப் பொருட்கள் சிதைத்து விடுகிறது. ஒரு காலத்தில் வட கிழக்கு மாநிலங்கள் விவசாயம் உள்ளிட்ட அனைத்திலும் முதன்மையாக இருந்தது. ஆனால், இன்று போதைப் பொருட்களால் அதன் நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் கஞ்சா தடை செய்யப்பட்ட் பொருள். ஆனால், இன்று அது சிகரெட் வடிவில் அதிகளவில் விற்பனை ஆகிவருகிறது. ஒரு காலத்தில் கஞ்சா மட்டுமே போதைப் பொருளாக அதனை பயன்படுத்துவோருக்கு கிடைத்தது. ஆனால், தற்பொழுது கொக்கைன், ஹெராயின் உட்பட 30க்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள் கிடைக்கின்றன.
குறிப்பாக, எல்எஸ்டி வகை போதைப் பொருட்கள் வந்துவிட்டது. இதற்கு இளைஞர்கள் அதிக அளவில் அடிமையாகி உள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளில் இருந்து கடல் வழியாக டன் கணக்கில் போதைப்பொருட்களை நம் நாட்டினுள் கடத்துகின்றனர்.
அதில் தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகிறது. அதற்கு காரணம், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய மக்கள் மிகவும் திறமையானவர்கள். இவர்களை ஒடுக்க வேண்டும், நாட்டின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தல் செய்யப்படுகிறது. ஆகவே, நாம் விழித்துக் கொள்ள வேண்டும். போதைப்பொருட்களை பயன்படுத்தவேக் கூடாது. போதைப் பொருட்கள் முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும்.
மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதியாக இருப்பதுடன், பெற்றோரிடமும் எடுத்துக் கூற அவர்களையும் அந்த வழியில் இருந்து மீட்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தத்தின் காரணமாக ஒருமுறை போதைப் பழக்கத்தை பயன்படுத்தி பார்க்கலாம் என்று சிலருக்கு தோன்றுகிறது.
அப்படி யாரும் ஒரு முறை கூட பயன்படுத்தக்கூடாது. பெற்றோர் வேலை செய்பவர்களாக இருந்தாலும், தங்கள் பிள்ளைகளிடம் நாள்தோறும் கலந்து பேசி, அவர்களின் மன அழுத்தத்தைப் போக்க வேண்டும். அனைவரும் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டும். இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என பிரதமர் தொடர்ந்து கூறும் நிலையில், மாணவிகள் தாங்களே தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும். மகளிர் பங்களிப்பால் தான் நாடு முழுமையான வளர்ச்சி அடையும்” எனக் கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “தமிழகத்தின் விடியல் அமெரிக்கா சென்றுள்ளது.. ஆனால் அங்கும் விடியவில்லை”- தமிழிசை பேச்சு!