திருநெல்வேலி: தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுப்பட்டனர். அப்போது பேசிய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநிலத் தலைவர் முருகையன், “ திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டங்களில் அரசு அலுவலர்களை தரக்குறைவாக பேசுகிறார்.
மேலும் ஒருமையில் பெண் அலுவலர்களை பேசுகிறார். அவர் வருவாய் துறை அலுவலர்கள் மீது பாரபட்சமான பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார். அதை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும். எங்களை அச்சுறுத்தல் இன்றி சமூக மக்கள் பணி மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
இதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில், கன்னியாகுமாரி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள்..தூத்துக்குடியில் மடக்கி பிடித்த போலீஸ்..டிரைவர் தப்பியோட்டம்..!
ஆட்சியருக்கு எதிராக புகார்: கடந்த ஆறு மாதங்களாக மாவட்ட ஆட்சியரிடம் பேசியும் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே இது போல் மாவட்ட அளவில் இரண்டு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்தவித மாற்றமும் இல்லை. இது குறித்து பலமுறை அமைச்சர்களிடம் புகார் அளித்தும் எந்த மாற்றமும் இல்லை.
எனவே முதலமைச்சர் மாவட்ட ஆட்சியரின் பாரபட்சமான நடவடிக்கைகளை ஆய்வு செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை விட வேறு வழி தெரியவில்லை” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்