சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்யப்படவில்லை. இந்நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிலவரம் தொடர்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையில் அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். தொகுதிப் பங்கீட்டில் உள்ள பிரச்னை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மூன்று முறை அழைப்பு விடுத்தும், தற்போது வரை அவர்கள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இந்நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சட்டவிரோத கொடிக்கம்பம் விவகாரம்; நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!