கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் அன்னூரில் வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆடு மற்றும் கோழி சந்தை மிகவும் பெயர் பெற்ற ஒன்று. அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் அதிகம் இருப்பதால், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு மற்றும் கோழிகளை, இந்த சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், கோவை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தையாக இருக்கும் அன்னூர் ஆட்டுச் சந்தையில், மொத்த விலைக்கு ஆடு மற்றும் கோழிகளை வாங்கக் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம். வழக்கமாகப் பண்டிகை காலங்கள் என்றாலே, அன்னூர் ஆட்டுச் சந்தையானது களைக்கட்டும்.
அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகை காலத்தில், சுமார் 1.5 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இன்று (சனிக்கிழமை) அதிகாலை வழக்கம் போல ஆட்டுச் சந்தை கூடியது. ஆனால், வழக்கத்தைக் காட்டிலும் விவசாயிகளும், வியாபாரிகளும் மிகவும் குறைவாகவே ஆடுகளை வாங்க வந்திருந்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், சுமார் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே வியாபாரம் நடைபெற்றதாக, அன்னூர் ஆட்டுச் சந்தை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். மேலும், ஒரு நபர் ரொக்கமாக 49 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்பதால், அன்னூர் ஆட்டுச்சந்தையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை கால விற்பனை, கடும் சரிவைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "சந்தைக்கு வருபவர்களிடம் சோதனை மேற்கொள்வார்கள் என்பதால், வியாபாரிகள் வருவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். வருடத்திற்கு சில முறை மட்டுமே நல்ல வியாபாரம் ஏற்படும் நிலையில், இந்த ஆண்டிற்கான பெரிய வியாபாரம் எங்களுக்கு கை கொடுக்கவில்லை" என வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் படம் பொறித்த கீ செயின், தொப்பி உள்ளிட்டவைகள் பறிமுதல் - Lok Sabha Election 2024