சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஏழு கிணறு, கிருஷ்ணப்ப குளத் தெருவில் போலீசார் ரோந்துப் பனியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், மூவரின் உடைமைகளை சோதனை செய்து பார்த்தபோது, அவர்கள் வைத்து இருந்த பிளாஸ்டிக் பையில் 'ஓபியம்' என்ற போதைப்பொருள் வைத்திருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தேவாராம், ஹத்திராம் மற்றும் ஹர்தேவ்ராம் என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், ஏழு கிணறு காவல் நிலையத்தில் வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மூவரும் சென்னையில் உள்ள ஏழு கிணறு பகுதியில் தங்கி இருந்ததும், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து ஓபியம் என்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருளை வாங்கி வந்து, சவுகார்பேட்டை பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்களிடத்தில் இருந்த மூன்று கிலோ ஒபியம் போதைப்பொருள் மற்றும் 1.80 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுக்கும் போட்டோகிராபர்ஸ் கவனத்திற்கு.. சென்னையில் நடந்தது என்ன?