புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி பிரியா (45). இவர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்துவரும் நிலையில், கடந்த 7ஆம் தேதி இரவு பணியில் இருந்து வீட்டிற்கு கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் சத்தியமூர்த்தி சாலையில், கோட்டாட்சியர் அலுவலகம் அருகே புதிதாக நகராட்சியால் போடப்பட்டு, எந்த வித முன்னறிவிப்பு அடையாளமும் இன்றி இருந்த வேகத்தடையில், இருசக்கர வாகனம் ஏறி இறங்கியதில் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. இதில், காவல் ஆய்வாளர் பிரியா தலையில் பலத்த காயமடைந்துள்ளார்.
இதையடுத்து, புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆய்வாளர் பிரியா நேற்று (ஏப்.10) மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது இறுதிச் சடங்கு புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிழக்கில் நடைபெற்றது.
இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, ஆய்வாளர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, மயானம் வரை அவரது உடலைச் சுமந்து வந்தார்.
பின்னதாக, மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் 3 சுற்றுகளாக 21 குண்டுகள் முழங்க ஆய்வாளர் உடலுக்கு காவல்துறையினர் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. ஆய்வாளரின் இறுதிச் சடங்கு நிகழ்வில் ஆலங்குடி, புதுக்கோட்டை டவுன் மற்றும் கோட்டைப்பட்டினம் டிஎஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.
உயிரிழந்த ஆய்வாளர் பிரியாவிற்கு நிரஞ்சனா (15) மற்றும் நிஷாலினி (12) என்ற இரு மகள்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரை அருகே நிகழ்ந்த விபத்தில் 6 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - Madurai Accident