புதுச்சேரி: நரேந்திர மோடியின் சர்வாதிகாரப் போக்கினை நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆகவே, இந்த ஆட்சி வெகு விரைவில் கலைந்துவிடும் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னும், பின்னும் வந்த கருத்துக் கணிப்புகளில் பாஜக தனியாக 365 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இவர்கள் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்று கோஷமிட்டு தேர்தலைச் சந்தித்தனர்.
பாஜக அதிக இடங்களைப் பெறும் என்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பொய் ஆகியுள்ளது. நாட்டு மக்கள் பாஜகவுக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தை புகட்டியுள்ளனர். ஆணவம், தொழிலதிபர்களை மிரட்டி வழக்கு பதிந்து பணம் வசூலித்தல், சிபிஐ, அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தங்கள் கட்சியில் சேர்க்க வைத்தனர். ஆனால், பிரதமர் நாற்காலியில் ஒட்டிக்கொண்டு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பிரதமர் ஆட்சி விரைவில் கலையும்: இது பாஜகவுக்கும், மோடிக்கும் மிகப்பெரிய அவமானம். மோடி ஒரு சிறந்த மனிதர் என்றால், அவர் அந்த பதவியை நோக்கிச் சென்றிருக்கக் கூடாது. இந்த ஆட்சி குறைப்பிரசவ ஆட்சியாகத்தான் இருக்கும். 5 ஆண்டுகாலம் இந்த ஆட்சி இருக்காது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் அனுபவமிக்க அரசியல்வாதிகள். மோடியின் சர்வாதிகாரப் போக்குக்கும், அவர்களுக்கும் ஒத்துவராது. ஆகவே, இந்த ஆட்சி வெகு விரைவில் கலைந்துவிடும். நரேந்திர மோடியை அவர்களின் கூட்டணிக் கட்சிகளே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.
பாஜகவுடன் கூட்டணி சேரும்போது, முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காகத்தான் கூட்டணி சேருகிறேன் என்றார். 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தார். அதை 300 முறை கூறியுள்ளார். ஆனால், அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டது. இன்று வரை பிரதமரை, முதலமைச்சர் ரங்கசாமி இரண்டு முறை சந்தித்துள்ளார்.
மத்திய பாஜக ஆட்சியுடன் கூட்டணியில் இருந்தும் இதுவரை மாநில அந்தஸ்து பெறவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. இதனால் தான் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். முதலமைச்சர் இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அவர் செய்யமாட்டார்.
புதுச்சேரி மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துவிட்டது. ரங்கசாமிக்கு வேண்டியது முதலமைச்சர் நாற்காலி. அதற்காக அவர் எதையும் செய்வார். காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றியின் மூலமாக, நமச்சிவாயம் செல்லாக்காசு என்று தெளிவாகத் தெரிகிறது. புதுச்சேரி மாநில மக்களுக்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதனால் தான் ரங்கசாமியை அவருடைய தொகுதி மக்கள் தோற்கடித்துள்ளனர்.
உண்மையிலேயே இவர்களுக்கு சூடு சொரணை இருந்தால், தோல்விக்கு பொறுப்பேற்று கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டுச் செல்ல வேண்டும். இந்தியா கூட்டணி இனி வரும் காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்போம். மத்தியில் ஒரு பலமான எதிர்கட்சிகளாக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். இனிவரும் காலம் இந்தியா கூட்டணியின் காலம். மோடியின் காலம் அஸ்தமனமாகி இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் மறுபடியும் எங்கள் கூட்டணியின் கை ஓங்கும்” என்றார்.
இதையும் படிங்க: "கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு மார்க்சிய சிந்தனை தடையாக உள்ளது" - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! - RN Ravi about Marxism