ஈரோடு: ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய சுற்றுலா தளங்களுள் ஒன்றாக இருப்பது பவானிசாகர் அணை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அணையின் அருகே அமைந்துள்ள பூங்காவில் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட்டுச் செல்வர்.
அதே போல், பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியை பார்வையிட ஆண்டுதோறும் ஆடி 18 - ந் தேதி மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படும். இதற்காக ஈரோடு மட்டும் அல்லாது கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து செல்வர்.
இந்தநிலையில் அணையின் பாதுகாப்பு கருதி ஆடி 18ஆம் பெருக்கு அன்று அதாவது நாளை மறுநாள் 3ம் தேதி பவானிசாகர் அணை மேல் பகுதியைப் பார்வையிடப் பொதுமக்களுக்கு 5 வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் ஆடிப்பெருக்கு பண்டிகை நாளில் பவானிசாகர் பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 91 அடிக்கும் மேல் உள்ளது.
இதனால் மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின் படி இந்த ஆண்டும் நீர்த்தேக்க பகுதிகளை பார்வையிடப் பொதுமக்களுக்கு பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணை நிலவரம்: ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 105 அடியாகவும், நீர் இருப்பு கொள்ளளவு 32.8 டிஎம்சியாக உள்ளது. இந்தநிலையில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93 அடியாகவும் நீர் இருப்பு 23.66 டிஎம்சியாகவும் உள்ளது. மேலும் நீர் வரத்து 7044 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 1155 கன அடியாக உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கேரள தம்பதியின் சதுரங்க வேட்டை.. இரிடியம் மோசடியில் 25 லட்சம் அபேஸ்.. போலீஸ் விசாரணையில் பகீர்!