தூத்துக்குடி: தூத்துக்குடி, சண்முகபுரம் அருகே உள்ள சிவந்தாகுளம் ரோட்டில் மாணிக்கராஜா காலனி பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் மற்றும் வீடுகளின் மீது கடந்த 10 நாட்களாக இரவு, பகல் என தொடர்ந்து மேலே இருந்து கற்கள் விழுந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வீடுகளின் ஓடுகள் உடைந்து வீட்டுக்குள்ளும் கற்கள் விழுகின்றன. மேலும், அந்த பகுதியில் வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே வந்து நின்றால் அவர்கள் மீது ஒரு குறிப்பிட்ட சில நேரங்களில் தொடர்ந்து கற்கள் விழுந்து காயம் ஏற்படுகிறதாம். இதில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு தையல் முதற்கொண்டு போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அச்சத்துக்கு உள்ளான மக்கள் வீடுகளுக்கு உள்ளேயும் தெருக்களிலும் வசிக்க முடியாமலும் தலையில் ஹெல்மெட், பாத்திரங்கள், தொப்பி, குடை ஆகியவற்றை கவசமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக தென் பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
இதையும் படிங்க: போலீஸ் மீதே பெப்பர் ஸ்பிரே அடித்த பலே திருடர்கள்! மாஸாக துரத்தி பிடித்த போலீசார்!
புகாரின் பெயரில் அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் சுற்றியுள்ள பகுதிகளில் மறைந்திருந்து மர்ம நபர்கள் யாரும் கல்லை எறிகிறார்களா? என சோதனை செய்தனர். இதில் யாரும் சிக்கவில்லை. ஆனால் காவல்துறையினர் அந்த பகுதியில் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதே அங்கு கற்கள் விழுந்துள்ளது. இதன் காரணமாக காவல் துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு தொடர்ந்து கடந்த 10 நாட்களாக கற்கள் மேலே இருந்து தங்கள் பகுதியில் விழுவதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதுடன் தூக்கம் இல்லாமல் குழந்தைகளுடன் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சங்கரேஸ்வரன் கூறுகையில், "கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் வீடுகளின் மீது கற்களை வீசி வருகின்றனர்.
இந்த மாணிக்க ராஜா காலனி பின்புறம் காடு போன்ற பகுதி உள்ளது. அதனால் அங்கு பதுங்கி இருந்து யாரேனும் இது போன்ற செய்கின்றார்களா என பார்த்தோம். ஆனால் யாரும் சிக்கவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டலே கற்களை வீசி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள பலர் வீடுகளை காலி செய்துவிட்டுச் சென்று விட்டன. எனவே கற்களை வீசும் நபர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என" கோரிக்கை வைத்துள்ளார்.