கோயம்புத்தூர்: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், இந்தியா முழுவதும் ஏப்.19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு, மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி, அதாவது இன்று வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், கடந்த வாரம் முதல் இன்று வரை மாநிலம் முழுவதும் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் களம் காணும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோரின் அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு, கடன் மதிப்பு உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை: பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை, இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது அவர் அளித்த பிரமாணப் பத்திரத்தில், அவரது சொத்து மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 2022-2023ஆம் நிதியாண்டில் 20 லட்சத்து 51 ஆயிரத்து 740 ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.
மேலும், அதே ஆண்டில் அவரது மனைவிக்கு 6 லட்சத்து 8 ஆயிரத்து 450 ரூபாய் வருமானம் வந்துள்ளது. அண்ணாமலை பெயரில் 36 லட்சத்து 4 ஆயிரத்து 100 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்தும், 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்தும் உள்ளது. அதேபோல, அவரது மனைவி அகிலாவின் பெயரில் 2 கோடியே 3 லட்சத்து 12 ஆயிரத்து 77 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்தும், 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்தும் உள்ளது.
இதுமட்டுமல்லாது, அண்ணாமலை 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி கார் ஒன்று வைத்துள்ளார். அண்ணாமலை மொத்தம் 3 வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 25 லட்சத்து 33 ஆயிரத்து 100 ரூபாய் பணம் வைத்துள்ளார். மேலும், கையிருப்பு ரொக்கமாக 5 லட்சம் ரூபாய் பணம் அண்ணாமலையிடமும், அவரது மனைவி அகிலாவிடம் 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணமும் உள்ளது. அண்ணாமலைக்கு மொத்தம் 62.73 ஏக்கர் நிலம் உள்ளது. அண்ணாமலை மீது மொத்தம் 24 வழக்குகள் உள்ளன.
கணபதி ராஜ்குமார்: திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வேட்பு மனுத் தாக்கலின் போது அளித்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களைத் தந்துள்ளார். அதன்படி, கணபதி ராஜ்குமாரின் கையிருப்புத் தொகையாக, 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், அவரது மனைவி தமயந்தியிடம் 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயும் உள்ளது.
மேலும், கணபதி ராஜ்குமார் பெயரில் 82 லட்சத்து 5 ஆயிரத்து 132 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 44 கோடியே 26 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. அதேபோல அவரது மனைவி தமயந்தி பெயரில், 91 லட்சத்து 63 ஆயிரத்து 95 ரூபாய் அசையும் சொத்துகளும், 3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.
இதனைத் தவிர்த்து, கணபதி ராஜ்குமார் மகன் விகாஷ் பெயரில் 3 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், ராஜ்குமாரின் தாயார் பெயரில் 35 கோடியே 26 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளது. மேலும், கணபதி ராஜ்குமார் பெயரில் 2 கோடியே 79 லட்சத்து 28 ஆயிரத்து 399 ரூபாய் கடனும், மனைவி பெயரில் 32 லட்சத்து 31 ஆயிரத்து 446 ரூபாய்க் கடனும், அவரது மகன் விகாஷ் பெயரில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 213 ரூபாயும், ராஜ்குமாரின் தாயார் பெயரில் 15 லட்ச ரூபாயும் கடனாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.582.95 கோடி வைத்துள்ள ஆற்றல் அசோக்குமார்.. ஈரோடு திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு எவ்வளவு?