மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, மதுரை மாநகர் தல்லாகுளம் அருகே இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகள் நிலவிவந்த நிலையில், கடுமையான நிதி சிக்கலிலும் தள்ளாடி தவித்தது. இதனை அடுத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழக சமூகவியல் துறை தலைவராக பணியாற்றிய முனைவர் புவனேஸ்வரன், கல்லூரியில் முதல்வராக நியமனம் செய்யப்பட்டார்.
முனைவர் புவனேஸ்வரன் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு நிதி நிர்வாக சிக்கல்கள் சீர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இங்குள்ள சில பேராசிரியர்கள் கொடுத்து வந்த நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும், பதிவாளருக்கும் கடிதம் அனுப்பி இருந்தார்.
கல்லூரி பேராசிரியர்கள் பலரின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் முதல்வர் பதவியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி கல்லூரியின் முதுநிலை வகுப்புகளை தொடங்குவது தொடர்பாக கல்லூரி முதல்வர் புவனேஸ்வரன் அறையில் துறைத் தலைவர்கள் அளவிலான பேராசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 30) நடைபெற்றது.
இதனை அடுத்து, முதுநிலை மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள துறைகளையும் திறப்பது குறித்த விவாதம் நடைபெற்ற போது, பி.காம்., (சிஏ) துறையின் தலைவர் முனைவர் ராணி எழுப்பிய வினாவுக்கு, ஆங்கில துறை தலைவர் முனைவர் மோகன் விரும்பத்தகாத வகையில் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த வாக்குவாதத்தின் போது முனைவர் மோகன், முனைவர் ராணியை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி பேசி, ஆலோசனைக் கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு கத்தியதாகவும் தெரிகிறது. அப்போது உடன் இருந்த சக துறை தலைவர்களும் சமாதானம் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளனர். இருந்த போதும் வாக்குவாதம் மிகக் கடுமையாக முற்றியுள்ளது.
இந்த நேரத்தில் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரன், ஆங்கில துறைத் தலைவர் மோகனிடம் தாங்கள் நடந்து கொள்வது சரியல்ல. கல்லூரியை நீங்களே முன் நின்று நடத்த விரும்புகிறீர்களா? என்று கேள்வி எழுப்பி விட்டு அறையை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் மன உலைச்சலுக்கு ஆளானதாக கூறும் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரன், தன்னை கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு மதுரை காமராசர் பல்கலைக்கழக கன்வீனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், "ஏற்கனவே என்னை கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து விடுவித்து என்னுடைய சமூகவியல் துறைக்கே மாற்றம் செய்யுமாறு கடிதம் வழங்கியுள்ளேன்.
இந்த கல்லூரியில் இவர் போன்ற பேராசிரியர்கள் மத்தியில் என்னால் பணியாற்ற முடியாது. எனவே, என்னை கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருந்து விடுவித்து மீண்டும் நான் பணியாற்றிய சமூகவியல் துறைக்கே பணிமாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கல்லூரி முதல்வர் புவனேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பிரியாணி மேன் யூடியூபர் அபிஷேக் கைது.. காரணம் இதுவா?