சென்னை: சென்னை சாலிகிராமம் சத்தியமூர்த்தி தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (51). இவர் கடந்த நான்கு வருடங்களாக சாலிகிராமம் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்டத்தில் 15 லட்சம் ரூபாய் வரை இழந்து மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். மேலும், இந்த தகவலை மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தெரிவிக்காமல் என்ன செய்வது என தெரியாமல் இருந்துள்ளார்.
இந்த சூழலில் அலுவகம் முடிந்து வீட்டுக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய மகள் மற்றும் மகனுக்கு ''இதுவே என்னுடைய இறுதி நாள்'' என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இந்த தகவலை பார்த்த மகன் உடனடியாக எதிர் வீட்டில் உள்ள நபருக்கு தகவல் தெரிவித்து தந்தையை பார்க்கும்படி கூறியுள்ளார்.
அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழ்ப்பால் போடப்பட்டிருந்தது. பின்னர் ஜன்னல் வழியாக பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துகொண்டு சடலமாக கிடந்துள்ளார்.
இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற் கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ணமூர்த்தி கடந்த மூன்று வருடங்களாக ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்து மன அழுத்தத்தில் இருந்தது தெரிய வந்தது.
மேலும், தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
இதையும் படிங்க: "எனக்கு அவரை புடிச்சிருக்கு".. பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!