தருமபுரி: தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த நிலையில், சேலம் மாங்கனி மாநகர் என்று அழைக்கப்பட்டது. தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் இங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் காரணமாக, சேலம் மாவட்டத்திற்கு மாங்கனி மாநகர் என்று அழைக்கப்பட்டது.
இதனையடுத்து, சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி தனி மாவட்டமாக பிரிந்தது. இருப்பினும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களுக்கு சுவை மிகுதி என்பதால் மக்களிடம் வரவேற்பு உள்ளது.
காரிமங்கலம் மாம்பழம் மண்டி: தருமபுரி காரிமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்புறம் மற்றும் காவேரிப்பட்டினம் உள்ளிட்ட 25 கிலோ மீட்டர் சுற்றளவில் விளைவிக்கும் மாம்பழங்களை, விவசாயிகள் காரிமங்கலம் அகரம் கூட்ரோடு பகுதியில் உள்ள மாம்பழங்கள் மண்டியில் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மாம்பழங்கள், இயற்கையாகவே பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
சாலையோரக் கடைகள்: இப்பகுதி கிருஷ்ணகிரி - பெங்களூர் பைபாஸ் சாலையில் உள்ளதாலும், ஏராளமான மக்கள் இச்சாலையைக் கடந்து செல்வதாலும், இங்குள்ள கடைகளில் மாம்பழங்களை வழக்கமாக வாங்கிச் செல்கின்றனர். மாட்லாம்பட்டி பகுதியில் இருந்து காரிமங்கலம் வரை சாலையின் ஓரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாம்பழம் விற்பனைக் கடைகள் உள்ளன. மற்ற பகுதிகளை விட விலை குறைவு என்பதால், மக்கள் விரும்பி தங்களுக்குத் தேவையான பல்வேறு ரக மாம்பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து மொத்த வியாபாரி ரவிக்குமார் கூறுகையில், “காரிமங்கலம் அகரம் பைபாஸ் பகுதியில் 15 ஆண்டுகளாக மாம்பழங்களை விற்பனை செய்து வருகிறோம். மல்கோவா, அல்போன்சா (Alphonso mango), செந்தூரா(Sendura mango), இமாம் பசந்த் (Imampasand Mango), பீட்டர் உள்ளிட்ட மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
மேலும், 25 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்தும் மாம்பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றோம். இங்குள்ள கடைகளில் பெங்களூரு, சேலம், கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதியிலிருந்தும் வியாபரிகள் மற்றும் பொதுமக்கள் மாம்பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த ஆண்டு மாம்பழத்தின் வரத்து அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு வெயில் தாக்கத்தின் காரணமாக மாம்பழங்கள் வரத்து இல்லை. விளைச்சல் குறைவாகத்தான் உள்ளது. மாம்பழத்தின் விளைச்சல் குறைவால் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக, மாம்பழம் வாங்குபவர்கள் குறைந்த அளவிலேயே வாங்கிச் செல்கின்றனர். இதனால், வியாபாரம் மந்தமாக நடைபெறுகிறது. மழை இல்லாமல், வெயிலின் காரணமாக பூ மரத்திலேயே கருதியதால் வரத்து குறைவாக உள்ளது” எனக் கூறினார்.