சென்னை: கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்தார். தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சிக்கு முன்பாக, தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "விஜயகாந்த்திற்கு 9ஆம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளித் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும். விஜய பிரபாகர் ஒரு மாதம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தார். மண்ணின் மைந்தர் என்பதால், அவருக்கு அனைவரும் வாக்குளித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். ஜூன் 4ஆம் தேதி விடை தெரிய வரும்" என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து, வாக்காளர் பட்டியல் பெயர் விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தேர்தல் ஆணையம் முன் கூட்டியே வாக்காளர் பட்டியலைத் தெரிவிக்கின்றனர், ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர், பூத் கமிட்டியில் உள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்திருப்பார்கள். அப்படி ஆய்வு செய்யாமல் தேர்தல் நாள் அன்று சிலர் குறை சொல்கின்றனர்.
சென்னையில் வாக்கு சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது தலை குனிவான விஷயம். எல்லா இடத்திலும் அமர்ந்து அரசியல் பேசுகின்றனர், கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், சென்று வாக்கு செலுத்துவதில்லை, கருத்துகளைச் சொல்வதை விட்டு விட்டு ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். கண்டிப்பாக வாக்கு அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
அதன் தொடர்ச்சியாக, நீலகிரி ஸ்ட்ராங் ரூம் விவகாரம் குறித்து கேட்டபோது, "நீலகிரியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்றைய தினம் (ஏப்.27) சுமார் 4 மணி நேரம் முறையாக செயல்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. ஆகவே, எதனால் இப்படி நடைபெற்றது என தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும். வேறு எந்த இடத்திலும் இதுபோன்று நடைபெறாமல் பார்க்க வேண்டும்" என்று கூறினார்
இதனை அடுத்து, பிரதமர் மோடியின் ராஜஸ்தான் தேர்தல் பிரச்சார சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு, "காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் இருவரும் அவர்களின் வெற்றிக்காகப் பேசி வருகின்றனர். உண்மையான ஆதாரங்களை நிரூபிக்கும் போதுதான் கருத்து சொல்ல முடியும். பிரதமர் என்பவர் இந்தியாவிற்கு முதன்மையானவர்.
அவர் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. மேலும், பாஜக என்றாலே இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என கருத்து இருக்கும்போது, பிரதமர் ஏன் இப்படிப் பேசினார் என்பது குறித்து அவரைத்தான் கேட்க வேண்டும்" என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: நீலகிரி ஸ்ட்ராங் ரூம் பிரச்னை; "திமுகவுக்கு தோல்வி பயம்”.. எல்.முருகன் விளாசல்!