சிவகங்கை: காவல் நிலைய சார்பு ஆய்வாளருடன் ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவால் கர்ப்பமடைந்ததாக கூறி பெண் ஒருவர் காரைக்குடி மகளிர் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தர்ணாவில் ஈடுபட்ட பெண், "தான் 8 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கு காரணம் காரைக்குடி தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவக்குமார்" எனவும் ஆவேசமாக கூறினார். பின்னர் அந்த பெண்ணிடம் மகளிர் காவலர் ஒருவர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றார்.
ஆனாலும், சம்பந்தப்பட்ட சார்பு ஆய்வாளர் சிவக்குமார் வராததால் ஆத்திரமடைந்த அந்த பெண் மீண்டும் காவல் நிலையத்திற்கு வெளியே வந்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது பேசிய அந்த பெண், "20 ஆண்டுக்கு முன்பு திண்டுக்கல் கருதம்பட்டியை சேர்ந்த நாராயணசாமி என்பவரை திருமணம் முடித்து சிறிது காலத்திற்கு பிறகு பிரிந்துவிட்டு, திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் என்பவரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து பிரிந்து விட்டதாகவும், தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவக்குமார் (ஏற்கனவே திருமணம் ஆனவர்) பேஸ்புக்கில் 1 ஆண்டு முன்பு அறிமுகம் ஏற்பட்டு அதில் பழகி இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வருகிறோம். அவரால் தான் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன், காரைக்குடி அழைத்து வந்து தனி வீட்டில் வைத்த சிவக்குமார் தற்போது தன்னுடன் வாழ மறுக்கிறார். என் பிள்ளைக்கு அப்பா முக்கியம் அவருடன் திருமணம் செய்து வையுங்கள், அவர் மீது புகார் கொடுத்து அவமானப்படுத்த விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிவக்குமார் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த விளக்கமும், மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தஞ்சையில் அதிமுக நிர்வாகியை காவல் ஆய்வாளர் தாக்கியதாக எஸ்பியிடம் புகார் - சிசிடிவி காட்சிகள் வைரல்! - ADMK Executive Beaten By Police