தூத்துக்குடி: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலே தங்களது இலக்கு எனவும் விஜய் அறிவித்தார். அடுத்தடுத்து கட்சிக் கொடி, கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார். அப்போது, "தவெக முதல் மாநாட்டின் போது கொடி குறித்தான விளக்கம் மற்றும் கட்சியின் கொள்கை குறித்து அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.
இந்நிலையில் தான், நாளை(ஞாயிற்றுக்கிழமை) தவெக முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திட வேண்டும் என பொருளாதாரக் குழு, சட்ட நிபுணர்கள் குழு, வரவேற்புக் குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட 27 குழுக்களை அமைத்துள்ளார்.
மாநாடு நடைபெறக்கூடிய பகுதியில் வேலு நாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரின் கட்-அவுட்களுடன் விஜயின் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அழகு முத்துக்கோன், பெரும்பிடுகு முத்தரையர், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், மருது சகோதரர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி தவெக மாநாடு: கட்-அவுட் முதல் 100 அடி கொடி வரை.. சிறப்பு ஏற்பாடுகள் குறித்த அப்டேட்!
போஸ்டர்: விக்கிரவாண்டி மாநில மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக வேன், கார், பஸ் போன்ற 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிர்வாகிகள் இன்று மாலை புறப்படுகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் மாநாட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் முன்னாள் முதல்வர்களான காமராஜர், எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், "காமராஜர், எம்ஜிஆர் வழித்தோன்றல் புரட்சி தளபதி அழைக்கிறார்" போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.