தஞ்சாவூர்: திருச்சிற்றம்பலத்தில் பழமை வாய்ந்த புராதனவனேஸ்வரர் கோயிலில், கிராம மக்கள் மற்றும் ஓம் நமச்சிவாய பக்தர் குழுவினரின் கோரிக்கையை ஏற்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயிலில் கூடியிருந்த கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் இடையே கோயில் தொடர்பான பல்வேறு செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கூறுகையில், “திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சிவகாமி அம்மன் பஞ்சலோக செப்பு திருமேனி சிலை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்டு, மும்பை வழியாக அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு தனியார் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம் தினந்தோறும் சிலையை காட்சிப்படுத்தி பொருள் ஈட்டி வருகிறது. தற்போது அந்த பஞ்சலோக சிலையை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையினை அந்த அருங்காட்சியகம் எடுத்து வருகிறது. எனவே, ரூ.10 கோடி மதிப்புள்ள இந்த சிவகாமி அம்மன் பஞ்சலோக சிலையை 3 மாத காலத்திற்குள் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு கோயிலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கிராம மக்களின் ஆதரவோடு சிலையை மீட்டுக் கொண்டு வர சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 82 வயதில் கருநாகக்கடி.. 107 வயதில் எள்ளுப்பேரன்களுடன் கனகாபிஷேகம் கொண்டாடிய பேச்சியம்மாள் பாட்டி!